கிரிக்கெட்

ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது கேரள கிரிக்கெட் சங்கம்

ஸ்ரீசாந்த் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

கேரள கிரிக்கெட் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் மன்னிப்புக் கடிதம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

அவர் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர் மீதான தடையை நீக்க ஒருமனதாக முடிவு செய்தது.

எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீசாந்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் வரும் கேரள கிரிக்கெட் லீக் தொடரில் 'ஏரிஸ் கொல்லம் செயிலர்ஸ்' (Aries Kollam Sailors) அணியின் இணை உரிமையாளராக ஸ்ரீசாந்த் செயல்படலாம்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் சர்வதேச அளவில், 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டும், 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஸ்ரீசாந்த்துக்கு 3 ஆண்டு தடை விதித்து கேரள கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த தடையை எதிர்த்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக, தான் வெளியிட்ட கருத்துகளுக்காக வருத்தம் தெரிவித்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதத்தை ஸ்ரீசாந்த் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.