கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து சஞ்சு சாம்சன் வாழ்த்து பெற்றார்.
இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இருந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடினார். மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் தொடர் நாயகன் விருதை வென்றும் அசத்தினார்.
உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் சஞ்சு சாம்சன் சொந்த ஊர் திரும்பினார். அப்போது கேரள மாநில அமைச்சர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சனை கௌரவிக்கும் வகையில், கேரள அரசு மற்றும் கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், சஞ்சு சாம்சனுக்கு 'தங்க பேட்' ஒன்றை பரிசாக வழங்கி சிறப்பித்தார். மேலும் இவ்விழாவில் கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.