சென்னை:
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் போஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சென்னைய அணியில் இணைந்துள்ளார்.
45 வயதான போஸ்டர் இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சென்னை அணியில் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி, பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமோன்ஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.
முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2020-2023 வரை உதவிப் பயிற்சியாளராகவும் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மேலும், 2026 ஜனவரியில் டெசர்ட் வைப்பர்ஸ் அணியை ILT20 சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.