இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 3 ஐ.சி.சி. கோப்பையை வென்றது. 2024-ல் 20 ஓவர் உலக கோப்பை, 2025-ல் சாம்பி யன்ஸ் டிராபி, சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பை ஆகியவற்றை வென்றது.
உலக கோப்பை இலக்கு:
அடுத்து ஒருநாள் போட் டிக்கான உலக கோப்பை யை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. 50 ஓவருக்கான உலக கோப்பை போட்டி 2027-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ல் முதல் முறையாக உலக கோப்பையை ைகப்பற்றியது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் தோனி கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அதன் பிறகு இதுவரை சாம்பியன் பட்டம் பெறவில்லை. 2023-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
20 வீரர்கள்:
2027-ல் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இப்போதே பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் தேர்வுக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் உலகக் கோப்பைக்காக இந்திய அணியின் 20 சாத்தியமான வீரர்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். போட்டி:
இவர்களின் செயல் திறன்களை வருகிற 28-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் போது அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் கூர்ந்து கவனிப்பார்கள் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்வுக்குழுவில் எஸ்.எஸ்.தாஸ், ஆர்.பி.சிங், அஜய் ராத்ரா, பிரக்யான் ஓஜா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தேர்வுக் குழு உறுப்பினர்கள்:
ஐ.பி.எல். தொடரின் போது தேர்வுக் குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மைதானங்களுக்கு நேரில் சென்று போட்டிகளைக் கண்காணிப்பார்கள் என்றும், மற்ற போட்டிகளை தொலைக்காட்சியின் வாயிலாக கவனிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் அகர்கர் மும்பையில் வசித்து வருகிறார். இதனால் அவர் அங்கு நடைபெறும் போட்டிகளை நேரில் பார்வையிடுவார். எஸ்.எஸ்.தாஸ் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளையும், ஆர்.பி.சிங், விஜய் ராத்ரா ஆகியோர் டெல்லியில் நடைபெறும் போட்டிகளையும் பார்வையிடுவார்கள். பெங்களூரு, ஐதராபாத்தில் நடைபெறும் போட்டிகளை ஓஜா பார்வையிடுவார்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு தேர்வாளரும் வாரத்துக்கு குறைந்தது ஒரு போட்டியையாவது நேரடியாக மைதானத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வாரத்துக்கு 5 போட்டிகள் மைதானத்தில் இருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படும். மற்ற போட்டிகளை அவர்கள் வழக்கம்போலத் தொலைக்காட்சியின் வாயிலாக கண்காணிக்க முடியும்’ என்றார்.