கிரிக்கெட்

IPL 2026 | டெல்லி போராட்டம் வீண்... கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்

சிறப்பாக ஆடிய கே.எல். ராகுல் 92 ரன்களை விளாசினார்.

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் 14-ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் 12 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். கில் 45 பந்துகளில் 70 ரன்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) விளாசினா்.

வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்தார். போட்டி முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், நிகிடி மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

211 ரன்களை துரத்திய டெல்லி அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா 24 பந்துகளில் 41 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசி அவுட் ஆனார்.

இவருடன் களமிறங்கிய கே.எல். ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். ஆட்டத்தின் கடைசி வரை போராடிய கே.எல். ராகுல் 52 பந்துகளில் 92 ரன்கள் (11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய விப்ராஜ் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

கடைசி மூன்று பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் டேவிட் மில்லர் சிக்சர் விளாசினார். இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த பந்தை எதிர்கொண்ட மில்லர் பந்தை அடிக்காமல் ரன் எடுக்கும் முயற்சியில் குல்தீப் யாதவ் அவுட் ஆக குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினர்.