கிரிக்கெட்

IPL 2026 | சஞ்சு சாம்சன் அதிரடியால் டெல்லியை துவம்சம் செய்தது சி.எஸ்.கே.

சி.எஸ்.கே. அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 87 ரன்களை குவித்தார்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 48-ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் கே.எல். ராகுல் நிதானமாக ஆடி முறையே 19 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் நிலைத்து ஆடிய ஸ்டப்ஸ் மற்றும் சமீர் ரிஸ்வி டெல்லி அணி ஸ்கோர் அதிகரிக்க செய்தனர்.

இருவரும் முறையே 38 மற்றும் 40 ரன்களை குவிக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை சேர்த்தது. சென்னை தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்நீத் சிங் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

156 ரன்களை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உர்வில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், சஞ்சு சாம்சன் மற்றும் கார்திக் ஷர்மா ஜோடி சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் கவனம் செலுத்தியது. சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 87 ரன்களையும், கார்த்திக் ஷர்மா 31 பந்துகளில் 41 ரன்களை குவித்தார்.

இதன் காரணமாக சி.எஸ்.கே. அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.