கிரிக்கெட்

பிரசித் கிருஷ்ணா அபாரம்: இந்தியா வெற்றிபெற 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ், ரஹமத் ஷா தலா 5 ரன்னில் அவுட்டாகினர். இப்ராகிம் ஜட்ரன் 11 ரன்னும், டார்விஷ் ரசூலி 1 ரன்னும் எடுத்தனர்.

அந்த அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

5வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹஸ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஓமர்சாய் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 105 ரன் சேர்த்த நிலையில் ஒமர்சாய் 50 ரன்னில் அவுட்டானார்.

சிறப்பாக ஆடிய ஹஸ்மதுல்லா ஷஹிதி தனி ஆளாகப் போராடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். இது அவரது முதல் சதமாகும்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.