இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி பர்மிங்காமில் இன்று (ஜூலை 14) நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து 47.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 258 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்து அணியை மீட்டார். அவரோடு லியம் டாஸன் (68 ரன்கள்) இணைந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இந்திய தரப்பில் அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா, துபே தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து இந்தியா 259 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் இறங்கியது.
ரோஹித் சர்மா 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலியும் பெரிய ஸ்கோர் எடுக்கத் தவறி, ஜோப்ரா ஆர்ச்சரிடம் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
விராட் மற்றும் ரோஹித் விக்கெட் இழப்பின் மூலம் இந்தியா 48 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 100 மேல் கொண்டு சென்றது.
75 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 80 ரன்கள் எடுத்த கில் தொடையில் காயம் காரணமாக பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது களத்தை விட்டு வெளியேறினார்.
கில் வெளியேறிய சற்று நேரத்தில் 35 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் ரன் அவுட் ஆனார்.
இதன்பின் வந்த கே.எல். ராகுல் ஆட்டம் சொல்லும்படியாக இல்லை. ஆனால் அக்சர் பட்டேலும் வாஷிங்டன் சுந்தரும் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் இறங்கினர்.
ஆல்ரவுண்டர் அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
இறுதியில் 45.2 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெற்றி கொண்டது.