ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹஸ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஓமர்சாய் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 105 ரன் சேர்த்த நிலையில் ஒமர்சாய் 50 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய ஹஸ்மதுல்லா ஷஹிதி தனி ஆளாகப் போராடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். இது அவரது முதல் சதமாகும்.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி இறங்கியது. இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
முதல் விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 79 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 28.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
ஜெய்ஸ்வால் 86 பந்தில் 3 சிக்சர், 14 பவுண்டரியுடன் 110 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.