இங்கிலாந்தில் நடந்து வரும் 10-வது ஐ.சி.சி. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் தோல்வியைத் தழுவாமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளன. லீக் ஆட்டம் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
அரையிறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும், இங்கிலாந்து 40 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன. இதனால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய பெண்கள் அணி இதுவரை 6 தடவை டி20 உலகக் கோப்பையை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) வென்றுள்ளன. 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி அறிமுக உலகக் கோப்பையை (2009) கைப்பற்றி இருந்தது. 17 ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது.