கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் எல்லீஸ் பெர்ரி அரை சதம் கடந்து 71 ரன்கள் எடுத்தார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் உள்ளன.

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி நேற்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லீஸ் பெர்ரி அரை சதம் கடந்து 71 ரன்கள் எடுத்தார். ஜார்ஜியா வோல் 39 ரன் எடுத்தார்.

அனபெல் சதர்லேண்ட் 27 ரன் எடுத்தார். நிகோலா கேரி 26 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.

தொடக்க வீராங்கனை முனீபா அலி மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், பாகிஸ்தான் அணி 13.4 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா ஆடிய 4 போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.