ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், அபார சாதனை படைத்துள்ளார்.
இவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் பதக்கம் வென்றார். வித்யா, இந்திய தடகள ஜாம்பவான் பி.டி.உஷாவின் சாதனை ஒன்றையும் முறியடித்து ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பி.டி. உஷா, 1984-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்த பிரிவில 55.42 வினாடிகளில் இலக்கை எட்டியதே தேசிய சாதனையாக இருந்தது.
அவரது 42 ஆண்டு சாதனையை வித்யா முறியடித்துள்ளார். வித்யா 54.75 வினாடிகளில் இலக்கை கடந்து சாதித்து இருக்கிறார். தற்போது நடைபெறும் ஆசிய விளையாட்டில் வித்யா 2-வது பதக்கத்தை பெற்றுள்ளார். ஏற்கனவே அவர் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
27 வயதான வித்யா ராம்ராஜ் கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை ஊராட்சி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்ராஜ்-மீனா தம்பதியரின் 3 மகள்களில் ஒருவர்.
இவர்களில் வித்யாவுடன் இரட்டையராகப் பிறந்தவர் நித்யா. இவர்கள் இருவருமே தடை தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்ட வீராங்கனைகளாக பல வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
கடந்த முறை சீனாவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யாவுடன் நித்யாவும் பங்கேற்றிருந்தார். ஆனால், இந்த முறை பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவரால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இயலவில்லை.
வெற்றி குறித்து வீராங்கனை வித்யாவின் தந்தை ராம்ராஜ் கூறியதாவது:-
நான் கோவை சிட்கோவில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தேன். எனக்கு மொத்தம் 3 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது வித்யா, நித்யா இரட்டை குழந்தைகள்.
2 பேரையும் 5-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்க வைத்தேன். அதன்பின்பு வசதி இல்லாததால் கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்தேன்.
அங்கு 7-ம் வகுப்பு படிக்கும்போது, அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியை ஒருவர்தான் என்னுடைய 2 மகள்களையும் தடகளப் பயிற்சியில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர் அன்று தொடங்கி வைத்த பயணம்தான் இன்றைக்கு நாட்டுக்காக எனது மகள் வெள்ளிப் பதக்கம், வெண்கல பதக்கம் வாங்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
அங்கு அவர்கள் நன்கு பயிற்சி எடுத்து விளையாடியதால், அதற்குப் பின்பு ஈரோட்டில் விடுதியிலேயே தங்கி இருவரும் படித்து, அடுத்தடுத்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்றதால் மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்தனர்.
வித்யா இப்போது ரெயில்வே துறையிலும், நித்யா வருமான வரித்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.
எனது மகள்கள் இருவருமே, நாட்டுக்காக எத்தனையோ சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். இப்போது ஆசிய போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
முன்பு நடந்த ஆசியப்போட்டியில் எனது மகள் வித்யா, பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்து இருந்தார். நேற்றைய போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனையால் நானும், எங்கள் குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
எனது மகள்கள் 2 பேரும் இன்னும் பல சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நித்யாவுக்குப் பயிற்சியின்போது காயம் பட்டதால் இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாமல் போனதில் எனக்குப் பெரிய வருத்தம்.
ஆனால், அவர் மீண்டு வருவார். வித்யா, நித்யா இருவருமே இணைந்துதான் எப்போதும் பயிற்சி எடுப்பார்கள். ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
இந்த வெற்றி எங்களுடைய தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த மற்றொரு "ஊக்கப்பரிசு". இதனால் "எங்களுடைய தடை தாண்டுதல் ஓட்டம் தடையின்றி தொடரும்".
இப்போதும் என்னிடம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கச் சொல்லித்தான் பலரும் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் என்னுடைய மகள்கள் இருவரும் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதனால் அவர்களை நான் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை. திருமணம் குறித்து அவர்களே முடி வெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வித்யாவின் சகோதரி நித்யா கூறுகையில்" இந்தப் போட்டியில் நிச்சயமாக எனது சகோதரி பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அது உறுதியாகிவிட்டது. கடந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான் பங்கேற்றேன்.
ஆனால், இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வில் என்னால் இடம்பெற முடியவில்லை. என்னுடைய சகோதரி வித்யா, அடுத்தடுத்து நன்றாக விளையாடி முழுமையான தகுதியோடு இருந்தார். அதனால் அவர் பல வெற்றி களை குவித்துள்ளார். தடை ஓட்டத்திலும் சாதித்துள்ளார்" என்றார்.