46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஏழாவது சுற்றில், இந்திய ஆண்கள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேவேளையில், இந்திய பெண்கள் அணி ஜெர்மனியை துவம்சம் செய்தது.
நிகிதா விதுகோவ்-க்கு எதிரான ஆட்டத்தில் ஆர். பிரக்ஞானந்தா மிக துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார். உலக சாம்பியன் குகேஷ் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து மற்றொரு வெற்றியையும் பதிவு செய்தார்.
குகேஷை பொறுத்தவரை, எந்தப் பலகையில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. இதற்கு முந்தைய இரண்டு ஒலிம்பியாட்களில் முதல் பலகையில் விளையாடி தங்க பதக்கங்களை வென்ற அவர், தற்போது நான்காவது பலகையில் விளையாடினாலும் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பை கொண்டுள்ளார்.
லூக் மெக்ஷேனிடம் நிஹால் சரின் தோல்வியடைந்தது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை; இருப்பினும், விதித் குஜராத்தி மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
ஜெர்மன் பெண்கள் அணியின் வெற்றி நம்பிக்கைகள் ஆட்டத்தின் முதல் மணி நேரத்திலேயே தகர்க்கப்பட்டன. கோனேரு ஹம்பி ஒரு அனுபவம் வாய்ந்த வீராங்கனை என்றாலும், முதல் பலகையில் அவர் மிக விரைவாக வெற்றியை ஈட்டி தனது உயர்தர ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வரும் வைஷாலி இரண்டாவது பலகையில் ஆட்டத்தை சமன் செய்தார்; அதேவேளையில் திவ்யா தேஷ்முக் மூன்றாவது பலகையில் வெற்றி பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, சவிதா ஸ்ரீ தான் விளையாடிய ஐந்து ஆட்டங்களிலும் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து, அணிக்கு 3.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றியை பெற்று தந்தார்.
'ஓப்பனிங்' உத்திகளுக்கு பெயர் பெற்ற மூத்த வீரரை தனது சிறந்த வியூகங்களால் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். தொடக்க கட்டத்தை தாண்டியதும், அவர் ராணி பக்கம் (queenside) தனது அனைத்து படைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தி விரைவாக வெற்றி பெற்றார்.
குகேஷும் ராஜா இருக்கும் பக்கம் (king side) ஒரு வலுவான தாக்குதலை தொடுத்து வெற்றியை உறுதி செய்தார்; அவருக்கு பெரிய சவால்கள் ஏதும் இருக்கவில்லை.