விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: ஹாலந்திற்கு எதிராக இந்திய ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கில் அபார வெற்றி

இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கத்தை தக்கவைக்கும் பாதையில் உறுதியாக பயணிக்கிறது.

46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஐந்தாவது சுற்றில், பிரக்ஞானந்தா மற்றும் உலக சாம்பியன் டி. குகேஷ் ஆகியோரின் தலைமையில் களமிறங்கிய இந்திய ஆண்கள் அணி, ஹாலந்திற்கு எதிராக 3-1 என்ற கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில், இந்திய பெண்கள் அணி போலந்திடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

குறைந்த தரவரிசை கொண்ட வீரர்களுக்கு எதிராக மூன்று ஆட்டங்களை டிராவில் (சமநிலையில்) முடித்திருந்தாலும், மிக முக்கியமான தருணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா, நல்ல ஃபார்மில் இருந்த அனிஷ் கிரியை வீழ்த்தினார். அதேநேரம், குகேஷ் தனது ஐந்தாவது ஆட்டத்தில் நான்காவது வெற்றியை பதிவு செய்யும் வகையில் எர்வின் லா மியை (Erwin l'Ami) தோற்கடித்தார்.

இந்திய அணி உறுதி:

அர்ஜுன் எரிகைசி, ஜோர்டன் வான் ஃபாரஸ்ட்டுடன் ஆட்டத்தை டிராவில் முடித்தார்; நிஹால் சரின் பெரிய சவால்கள் ஏதுமின்றி லோக் வான் வெலியுடன் ஆட்டத்தை சமநிலையில் முடித்தார். தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய ஆண்கள் அணி, 2024-இல் புடாபெஸ்டில் நடைபெற்ற முந்தைய தொடரில் வென்ற தங்கப்பதக்கத்தை தக்கவைக்கும் பாதையில் உறுதியாக பயணிக்கிறது.

அன்றைய நாளின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, முதல் நிலை அணியான அமெரிக்கா, ஜெர்மனியின் சிறப்பான ஆட்டத்தால் தோல்வியை சந்தித்தது. ஃப்ரெட்ரிக் ஸ்வான் (Frederik Svane), ஹான்ஸ் மோக் நீமனுக்கு (Hans Moke Niemann) எதிராக அந்த அணியின் ஒரே வெற்றியை பதிவு செய்தார்.

வின்சென்ட் கீமர் - ஃபேபியானோ கருவானா இடையிலான ஆட்டமும், மத்தியாஸ் ப்ளூபாம் - வெஸ்லி சோ இடையிலான ஆட்டமும், அலெக்சாண்டர் டோன்செங்கோ - லெவோன் அரோனியன் இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தன.

முதலிடத்தில் மூன்று நாடுகள்:

இதற்கிடையில், உஸ்பெகிஸ்தான் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எட்டாவது நிலை அணியான ஹங்கேரியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது; இதுவே அன்றைய நாளின் மிகவும் ஆதிக்கமிக்க வெற்றியாக அமைந்தது. தற்போது உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தலா 10 மேட்ச் புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

உயர்தரவரிசை கொண்ட இந்திய பெண்கள் அணிக்கு இது ஏமாற்றமளிக்கும் நாளாக அமைந்தது; ஆர். வைஷாலி, அலெக்ஸாண்டிரா மால்ட்செவ்ஸ்காயாவிடம் (Aleksandra Maltsevskaya) தோல்வியடைந்தார், மற்ற மூன்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இதனால் இந்திய பெண்கள் அணி 1.5-2.5 என்ற மிக குறைந்த வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

உலகின் மிகப்பெரிய செஸ் தொடரான ​​இதில் இன்னும் ஆறு சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய பெண்கள் அணி எவ்வாறு மீண்டு வருகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT