நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடையும், 255 யூரோக்கள் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு.
தேசிய அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, இந்த மாத தொடக்கத்தில் டென்மார்க்கிற்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே பயிற்சி முகாமில் இருந்து ரொனால்டோ வெளியேறியதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது.
யூஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரில் நார்வேக்கு எதிரான போட்டியின்போது ரொனால்டோவை மாற்றுவீரர் வரிசையில் அமர வைத்ததால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த ரொனால்டோ, டென்மார்க் அணிக்கு எதிரான போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே கோபன்ஹேகனில் இருந்த போர்ச்சுகல் அணியின் பயிற்சி முகாமில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இந்தச் சம்பவம் குறித்து அக்டோபர் 9ஆம் தேதி விசாரணை தொடங்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒழுங்கு விதிகளை (விதிமுறை 160(1)) ரொனால்டோ மீறியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போர்த்துகீசிய கூட்டமைப்பு இந்தத் தடையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த 30 நாட்கள் தடையானது, அக்டோபர் 1-ஆம் தேதி (டென்மார்க் போட்டி நடந்த நாள்) முதலே கணக்கில் கொள்ளப்படுவதால், அவர் ஏற்கனவே 19 நாட்களைக் கடந்துவிட்டார்.
இதனால் போர்ச்சுகல் தேசிய அணி விளையாடவிருக்கும் எந்தவொரு முக்கியப் போட்டியையும் ரொனால்டோ தவறவிட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் பாதியில் நடக்கவிருக்கும் அடுத்த நேஷன்ஸ் லீக் போட்டிகளில் அவர் பங்கேற்க தகுதி பெறுவார்.