வழிபாடு

தலை சாய்ந்த நிலையில் காட்சியளிக்கும் மேச்சேரி பத்ரகாளியம்மன்

மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக செவி வழி செய்திகளால் அறிய முடிகிறது. கோவில் வளாகத்தில் புற்று அம்மன் உள்ளது. இது தானாகவே வளர்ந்த புற்று என சொல்லப்படுகிறது.

இங்கு கோபுரத்துடன் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்து வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். கொடிமரம் அருகே உள்ள அணையா விளக்கில் பக்தர்கள் எண்ணை வாங்கி ஊற்றி வழிபாடு செய்வார்கள்.

நிமிர்ந்த பார்வையுடன் வலது புறம் தலை லேசாக சாய்ந்த நிலையில் பத்ரகாளியம்மன் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு அம்சமாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல இங்கும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும், நான்கு வேதங்களே, நான்கு கோபுரங்களாக அமைந்துள்ளது.

மகா மண்டபத்தின் சுவர்களில் நர்த்தன விநாயகர், நாகதேவதை, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், அஷ்டலட்சுமிகள், தில்லை நடராஜர், மீனாட்சி அம்மன் ஆகிய கருங்கல் சிற்பங்கள் பழங்கால சிற்பக்கலையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

தமிழ்நாட்டில் எந்த கோவில்களிலும் இல்லாத வகையில் இங்குள்ள மகா மண்டபத்தின் நடுவில் நின்று தரிசனம் செய்தால் ராஜகோபுரத்தையும், மூலவர் விமானத்தையும், பத்ரகாளியம்மனையும் ஒருசேர தரிசனம் செய்யலாம்.

மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

கோவில் பிரகாரத்தின் கருவறை வெளிப்புற சுவர்களில் நர்த்தனகணபதி, மகேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, கவுமாரி, துர்க்கை போன்ற தெய்வங்களின் விக்கிரகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுவார்கள். பிரகார மண்டபத்தில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் பாடல் பெற்ற தலம் இல்லை என்றாலும் தொல்பொருள் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.