முருகன் கோவில் 
வழிபாடு

சோலைமலை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா- நாளை விமரிசையாக நடைபெறுகிறது

சோலைமலை முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

மதுரை அழகர் கோவில் மலை மேல் அமைந்துள்ள ஆறாம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.

பூஜைகள்

கடந்த ஜூலை 1-ந் தேதி மங்கல இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவற்றுடன் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெற்றன.

2-ந் தேதி காலை சாந்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், அக்னி சங்க்ரஹணம், தீர்த்த சங்க்ரஹணம் ஆகியவை நடைபெற்றன. மாலை ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கால கர்ஷணம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால யாக வேள்வி நடைபெற்றது. பின்னர் விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சந்திர ஹோரையில் அஷ்டபந்தன சாத்துதல் நடைபெற்றது.

நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வியும், மாலை மூன்றாம் கால யாக வேள்வியும் வேத மந்தி ரங்கள் முழங்க நடைபெற்றன. ஒவ்வொரு கால யாக வேள்வியிலும் த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, திருமறை மற்றும் சிவாகம பாரா யணங்கள் நடைபெற்றன.

இன்று காலை நான்காம் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5-ம் கால யாக வேள்வி, நாடிசந்தானம், உள்ளிட்ட இறுதிக்கட்ட யாக பூஜைகள் நடைபெற உள்ளன.

முருகன் கோவில்

இதனைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு சோலைமலை முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.