தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தில் மாரியம்மன்-காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா தொடர்ந்து 4 நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, ஊர் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பம்பை, மேளதாளங்கள் முழங்க சக்தி கரகம் மற்றும் பூங்கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர், அம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீளமுள்ள தீக்குண்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிராம பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏந்தி வழிபாடு செய்தனர்.
மேலும், 50 அடி உயரமுள்ள காளியம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விவசாயம் மற்றும் தொழில் வளம் பெற வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.