வழிபாடு

வாரம் ஒரு தேவாரம்

ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம்.

மாலை மலர்

சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப் பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

நெய்தவழ் மூவெரி காவல்ஓம்பு

நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த

மைதவழ் மாடம் மலிந்தவீதி

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும்

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்

கணபதி ஈச்சரம் காமுறவே.

-திருஞானசம்பந்தர்

விளக்கம்:-

நெய் சொரிந்து மூன்று வகையான வேள்வித் தீயை பேணி வளர்க்கும் அந்தணர்கள் போற்ற, மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் இறைவனே! வேள்வி செய்வதை தவமாக போற்றும் நான்மறையாளர்கள் பாராட்டி புகழும் செங்காட்டங்குடியில் திருக்கரத்தில் பெரிய தீயை ஏந்தி நடனம் புரிவதற்கு ஏற்ற இடமாக கணபதி ஈச்சரத்தை விருப்பம் கொள்ள என்ன காரணம்? சொல்வாயாக!