நடராஜர் நடனம் புரிந்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலேயே பஞ்ச சபைகள் இருக்கின்றன. சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராஜசபை என்று அழைக்கப்படும் அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சிற்றம்பலம்:- நடராஜர் ஆடும் சித்சபையைத்தான் 'சிற்றம்பலம்' என்கிறோம். இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, சிவகாமி அம்மை எப்போதும் கண்டு ரசித்தபடி இருக்கிறார். இதற்கு 'தப்ர சபா' என்ற பெயரும் உண்டு. இந்த சபைக்கு இரண்யவர்மன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்தான். இங்குள்ள படிகள் பஞ்சாட்சர படிகள் என்றும், நமசிவாய படிகள் என்றும் போற்றப்படுகின்றன.
பொன்னம்பலம்:- சிற்றம்பலத்திற்கு முன்பாக உள்ளது, இந்த பொன்னம்பலம். இதனை 'கனகசபை' என்றும் அழைப்பர். இங்குதான் நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜையும், ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடைபெறும்.
பேரம்பலம்:- இந்த இடத்திற்கு 'தேவசபை' என்றும் பெயர். விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் சபை இதுவாகும். இந்த சபைக்கு, மூன்றாம் குலோத்துங்கன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்துள்ளான்.
நிருத்தசபை:- இது நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே அமைந்திருக்கிறது. இங்கு நடராஜர், ஊர்த்துவ தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்.
ராஜசபை:- சிதம்பரம் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம்தான், ராஜ சபை ஆகும். ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடக்கும் விழாவில், தேரில் பவனி வரும் நடராஜர், இந்த ராஜசபைக்கு எழுந்தருள்வார். ஆருத்ரா தரிசனம் இங்குதான் நடைபெறும். அப்போது சிவகாமியம்மன் முன்பாக நடராஜர் முன்னும், பின்னுமாக நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு 'அனுக்கிரக தரிசனம்' என்று பெயர்.