ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவம்| Tirupati Temple

வருகிற 31-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

வசந்த காலம் என்பது குளிர்காலத்துக்கும் கோடைக்காலத்துக்கும் இடைப்பட்ட பருவம் ஆகும். பொதுவாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே, ஜூன் மாதம் வரை (தமிழ் மாதங்களில் பங்குனி, சித்திரை, வைகாசி) நீடிக்கும் வசந்த காலத்தில் மலர்கள் பூக்கும், இயற்கை புத்துயிர் பெறும்.

வசந்த காலத்தில் கோவில்களில் விழா எடுக்கப்படுகிறது. அந்த விழாவில் வாசனைமிக்க பூக்கள், பலவித பழங்கள் தெய்வங்களுக்கு சமர்ப்பிப்பது முக்கிய அம்சமாகும்.

அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30 முதல் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்த உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவம் வசந்த காலத்தில் நடப்பதால் வசந்த உற்சவம் எனப்படுகிறது.

வசந்த உற்சவத்தையொட்டி முதல் நாளான 30-ந்தேதி காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பின்னர் வசந்த உற்சவ மண்டபத்தில் எழுந்தருள்கிறார்கள். அங்கு அபிஷேகம் நைவேத்தியம் முடிந்த பின் மீண்டும் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

2-வது நாளான 31-ந்தேதி காலை 8 முதல் 10 மணி வரை உற்சவர் மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, பின்னர் வசந்த மண்டபத்தை அடைகிறார். அங்கு, அர்ச்சகர்கள் வசந்த உற்சவத்தை நடத்துகிறார்கள்.

இறுதி நாளான ஏப்ரல் 1-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர் தனித்தனி தங்கத்திருச்சி வாகனங்களில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து வசந்த மண்டபத்தை அடைகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு மாலை நேரத்தில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை அடைகின்றனர்.

ஒவ்வொரு நாளும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணியில் இருந்து 6.30 வரை ஆஸ்தானம் நடக்கிறது.

வசந்த உற்சவத்தை முன்னிட்டு வருகிற 30 முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாட்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. வருகிற 31-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.