சாமிதோப்பில் ஐயா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு தை திருவிழா வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை திறத்தலும், காலை 5 மணிக்கு ஐயாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றமும், பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், அன்று இரவு 7 மணிக்கு ஐயா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.
இரண்டாம் நாள் இரவு ஐயா பரங்கி நாற்காலியில் பவனி வருதலும், 3-ம் நாள் அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், ஆறாம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 8-ந் திருவிழா நடக்கிறது. அன்று ஐயா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் நாளன்று அனுமன் வாகன பவனியும், 10-ம் நாள் இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
27-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு ஐயா ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், பகலில் உச்சிபடிப்பும், இரவு கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.