ஆன்மிகம்

சனிப் பிரதோஷ வழிபாடும் அதன் பலன்களும்

உலகை காக்கும் பொருட்டு சிவபெருமான், அந்த ஆலகால விஷத்தை அருந்தினார்.

பிரதோஷ காலம்

பிரதோஷ வழிபாடு என்பது சிவ வழிபாட்டில் மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் பிரதோஷ நாள் வருகிறது. அதாவது அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன் வரும். ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷ தினங்கள் வருகின்றன. திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை 'பிரதோஷ காலம்' என்கிறோம்.

பொதுவாக பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்திற்கும் தனிச் சிறப்பு உண்டு. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

அமிர்தம்

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் வைத்து திருபாற்கடலை கடைந்தனர். தேவர்களும், அசுரர்களும் இரு பக்கமும் நின்று இழுக்க, மலையில் உடல் அழுந்தி ஏற்பட்ட வலியால் வாசுகி பெருமூச்சு விட்டது. அது விஷமாக மாறி கடலில் கலந்து, ஆலகால விஷமாக வெளிப்பட்டது. பிரபஞ்சத்தையே அழிக்கும் ஆற்றல் கொண்ட ஆலகால விஷத்தால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பப்பட்டன.

ஆலகால விஷம்

இதையடுத்து, உலகை காக்கும் பொருட்டு சிவபெருமான், அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷம் உடலில் இறங்காமல் இருக்க, சிவபெருமான் கழுத்தின் தொண்டை பகுதியை பார்வதி தேவி அழுத்தி பிடித்தார். இதனால் விஷமானது, சிவபெருமானின் தொண்டையிலேயே நின்றுவிட்டது. சிவபெருமான் கழுத்துப்பகுதி நீல நிறமாக மாறியது. இதன் காரணமாகவே ஈசன், 'நீலகண்டன்' என்று அழைக்கப்படுகிறார்.

சனிக்கிழமை

விஷத்தின் வீரியம் காரணமாக, சற்று மயங்கிய நிலையில் இருந்த சிவபெருமான் விழித்துக்கொண்டு, தன் வாகனமான நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நடனமாடினார். அவ்வாறு நடனமாடிய நேரத்தைதான், பிரதோஷ நேரமாக கணக்கிட்டு வழிபடுகிறோம். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை என கருதப்படுகிறது.

எனவே சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை வணங்கி விட்டு, சிவபெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் வந்துசேரும். பொதுவாக பிரதோஷ தினத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். எனவே, அந்நேரத்தில் நாமும் சிவபெருமானை வழிபட்டு வாழ்வில் உள்ள துன்பங்களை போக்கி கொள்ளலாம்.

சிவாய நம

பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி, திருநீறு அணிந்து சிவாலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளை படிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' ஓதி வழிபடுவது சிறந்தது. மற்ற நாட்களில் வரக்கூடிய பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதைவிட சனிப் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில், சந்திரசேகரன் பார்வதிதேவியுடன் ரிஷப வாகனத்தில் மூன்று முறை வலம் வருவார். முதல் சுற்றில் செய்யப்படும் வேத பாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

சனிப் பிரதோஷம்

சிவபெருமானை நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கு இடையே தரிசிப்பது சிறப்பாகும். சனிப் பிரதோஷம் அன்று, விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும், இந்திரனுக்கு நிகரான செல்வாக்கு கிடைக்கும். வறுமை நீங்கி, வசந்தம் உண்டாகும்.

பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் முழுவதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். அதே வேளையில் சனிப் பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் ஐந்து ஆண்டுகள் ஆலயம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள்.