முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக பழமுதிர்சோலை முருகன் கோவில் போற்றப்படுகிறது. மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோவிலுக்கு சற்று அருகே இக்கோவில் உள்ளது. பல சிறப்புகளைக் கொண்டுள்ள இக்கோவில், பல மாதங்களாக கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வந்தது. இந்நிலையில் இந்த கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை நடைபெற்றது.
பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இன்று (ஆனி 21ம் தேதி) காலை சுமார் 06.00 மணியளவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
ஜூன் 30ம் தேதியன்று மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள், கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
கோவில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும் இணைந்து இந்த மகாகும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இவ்விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்களின் கூட்டத்தை வழிநடத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
முருகனின் முதல் படைவீடும் கடைசி படைவீடும் மதுரையிலே இருக்கிறது. ஆறுபடை வீட்டிற்கு செல்வோர் இத்தலத்தை விடுத்து, யாத்திரை பயணத்தை நிறைவு செய்ய இயலாது. இக்கோவிலில் முருகன் இங்கு வள்ளி தெய்வானையோடு தம்பதி சமேதரராக காட்சிதந்து அருள்பாலிக்கிறார். ஆறுபடை வீடுகளில் வேறெங்கும் காண இயலாத இந்த காட்சி இத்தலத்தின் சிறப்பாகும்.
இக்கோவிலுக்கு அருகே மிகவும் பழமைவாய்ந்த ஒரு நாவல் மரம் உண்டு. ஒளவையார் இவ்வழியாக செல்லும் போது முருகன் அவரை சோதிக்க வந்து, சுடப்பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா? என்ற கேள்வியை கேட்டு திருவிளையாடல் புரிந்த தலம் இது.
பொதுவாகவே கோடைகாலத்தில் மட்டுமே நாவல் மரம் காய்க்கும், ஆனால் இக்கோவில் மரம் மட்டும் தான் கந்தசஷ்டி பெருவிழாவின் போது கணிகளைத் தருகிறது. இதுவும் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
முன்னொரு காலத்தில், இந்த சோலை வனத்தில் முருகப்பெருமானின் வேல் தோண்றியதாக கூறுவர். ஆதலால் அக்காலக்கட்டத்தில் கல்லால் ஆன வேல் மட்டுமே வழிபாடாக இருந்துள்ளது. காலப்போக்கில் முருகன் வள்ளி தெய்வானை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. தமிழ் புலவரான நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் இத்தலத்தை போற்றி பாடி உள்ளார்.
பழமுதிர்சோலையின் மலை மீது நூபுர கங்கை தீர்த்தமும், ராக்காயி அம்மன் கோவிலும், மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோவிலும் அமைந்துள்ளது இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
இது தவிர இந்த மலையில் அனுமன் தீர்த்தம், கருட தீர்த்தம் உள்ளிட்ட சில தீர்த்தங்கள் உள்ளது. பல அரிய வகை மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.
அதிகாலையில் நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். சுவாமி தரிசனம் செய்தபிறகு செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், பழமுதிர்ச்சோலை கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகமும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் கூறினார்.
அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் என அனைவரும் பங்குபெற்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அரோகரா கோஷம் முழங்க கும்பாபிஷேக விழா மிகக்கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. பக்தர்கள் மண்டல பூஜை நாட்களில் கோவிலுக்கு சென்று கோபுர தரிசனம் செய்து வருவது சிறப்பாகும்.