ஆன்மிகம்

பேய் உருவம் வேண்டி பெற்ற புனிதவதி: இன்று மாங்கனி திருவிழா

புனிதவதியை சோதிக்க எண்ணம் கொண்ட சிவபெருமான் அவர் வீட்டிற்கு சிவனடியார் வேடத்தில் வந்தார்.

அறுபத்து மூன்று நாயன்​மார்​களில் சிறப்​பிடம் பெற்​றவரும், இறைவ​னால் அம்​மையே என்று அழைக்​கப்​பட்​ட​வரு​மான புனிதவ​தி​யார் என்று அழைக்​கப்​படும் காரைக்​கால் அம்​மை​யாருக்கு காரைக்​காலில் தனிக்கோயில் உள்​ளது.

காரைக்காலில் வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன்-தர்மவதி தம்பதியருக்கு புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அவர், சிறுவயதில் இருந்தே சிவபெருமான்மீது பக்தி கொண்டவராக இருந்தார்.

நாகப்பட்டினத்தில் உள்ள நீதிபதியின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு புனிதவதியை மணமுடித்துக் கொடுத்தனர். ஒரே மகள் என்பதால் காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையில் இருந்தார். அப்போது மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத் தோட்டத்தில் காய்த்த இரு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளைப் பெற்ற பரமதத்தர், அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

புனிதவதியின் சிவபக்தியை சோதிக்க எண்ணம் கொண்ட சிவபெருமான் அவரது வீட்டிற்கு சிவனடியார் வேடத்தில் உணவு வேண்டி வந்தார்.

அவரை வரவேற்று அன்னம் படைத்த புனிதவதியார், தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அவரை வாழ்த்திச் சென்றார்.

அதன்பின், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த கணவருக்கு பல வகை காய்கறிகளுடன் சாப்பாடு பரிமாறினார். அப்போது மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்த மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கூறினார் பரமதத்தர்.

இதனால் செய்வதறியாது திகைத்த புனிதவதியார், சிவபெருமானை வேண்டினார். அப்போது, மேலிருந்து அவரது கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்கு படைத்தார்.

முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்தார். இதையடுத்து, பரமதத்தர், இந்த கனி ஏது என கேட்டார். புனிதவதியார் நடந்ததை தெரிவித்தார்.

ஆனாலும் சந்தேகம் தெளியாத பரமதத்தர், சிவபெருமான் கனி தந்தது உண்மையானால் மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார்.

புனிதவதியார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அவரது கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது.

இதைக் கண்டு வியந்த பரமதத்தர், ‘நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது’ எனக்கூறி, புனிதவதியாரை விட்டு பிரிந்து, பாண்டிய நாடு சென்றார். அங்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார்.

பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருப்பது புனிதவதியார் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் புனிதவதியாரை பாண்டிய நாடு அழைத்துச் சென்றனர். அப்போது பரமதத்தர் புனிதவதியாரை தெய்வமாக வணங்கி தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார்.

இதனால் மனம் வருந்திய புனிதவதியார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்கும்படி இறைவனிடம் வேண்டி பெற்றார்.

இறைவனைக் காண கயிலாயம் சென்ற அவர், கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால் தரையில் கால் ஊன்றாமல் தலைகீழாக நடந்து சென்றார். இதனைக் கண்ட சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்தார்.

சிவபெருமான் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

இதையடுத்து அவர் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில் ஒருவராக வழிபடப்படும் இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் 4 நாட்களும், தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 26 நாட்களும் என ஒரு மாத காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

63 நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

இந்நிலையில், காரைக்காலில் மாங்கனி திருவிழா இன்று நடைபெறுகிறது. முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமிக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாத்தி வழிபடும் பக்தர்கள், சாமி வீதிஉலாவை தொடர்ந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர். அப்படி இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைப்பேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.