ஆன்மிகம்

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: கோலாகலமாக நடப்பட்ட முகூர்த்தக்கால்!

வீரவசந்தராயர் மண்டப புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருப்பணிகள் தீவிரம்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்கான முதற்கட்ட மற்றும் மிக முக்கியமானத் தொடக்க விழாச் சடங்கான 'முகூர்த்தக்கால்' நடும் விழா இன்று காலை கோயிலில் பக்திப் பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

இன்று நடைபெற்ற நிகழ்வு..

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா எவ்வித தடங்கலும் இன்றி மங்களகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக, இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் முறைப்படி நடப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வைக் காண்பதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்து, சாமி தரிசனம் செய்தனர்.

மகா கும்பாபிஷேகம்..

முகூர்த்தக்கால் நடப்பட்டதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்திற்கான அதிகாரப்பூர்வத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 17 (தமிழ் ஆவணி மாதம் 31-ம் நாள்) காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதி கோபுரங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

17 ஆண்டுகள் தாமதத்திற்கான பின்னணி..

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டிய நிலையில், கடந்த 2018 பிப்ரவரி 2 அன்று, கோயிலின் கிழக்குக் கோபுரம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் அந்தப் பகுதி பலத்த சேதமடைந்தது.

பழமை மாறாமல், கல் தூண்களைக் கொண்டு இந்த மண்டபத்தை மீண்டும் புனரமைக்கும் பிரம்மாண்டப் பணிகள் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக நடைபெற்று வந்தன.

தற்போது இந்தத் திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டதன் மூலம் யாகசாலை அமைக்கும் பணிகள் மற்றும் பிற விழா ஏற்பாடுகள் இனி வரும் நாட்களில் மிக வேகமாக நடைபெற உள்ளன.