மதுரையின் இளவரசி, கூடல் அழகி என்று பக்தர்களால் போற்றப்படும் மீனாட்சி அம்மன் கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கப்பட்டது. 2,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் புராணங்களுடன் வரலாறு மற்றும் இதிகாசங்களையும் உள்ளடக்கி இருக்கிறது.
தமிழ் மொழி, கலாசாரம், பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த கோவிலில் ஆண்டின் அனைத்து தமிழ் மாதங்களையும் முன்னிலைப்படுத்தி திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதேபோல் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு 2023-ம் ஆண்டு முறைப்படி பாலாலயம் செய்யப்பட்டு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தன.
2018-ம் ஆண்டு கோவிலுக்குள் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் தீ விபத்தில் சேதமடைந்தது. இந்த மண்டபம் ரூ.35 கோடியில் சீரமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி 2 ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அதன் பணிகள் முடிந்த நிலையில் நாளை (17-ந் தேதி) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 6-ந் தேதி வடக்காடி வீதியில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.
விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் 11-ந் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 184 குண்டங்களில் யாக வேள்விகள் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. விழாவில் நேற்று காலை 8-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான இன்று கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி பரிவார யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பரிவார கலசங்களுடன் புறப்பாடாகினர். பின்னர் 5 மணிக்கு பரிவார மூர்த்திகளின் சன்னதி கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் பரிவார மூர்த்திகளாக முக்குறுணி விநாயகர், சித்தி விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் மற்றும் சந்திரன், நவகிரகங்கள், காளி, ஊர்த்தாண்டவ மூர்த்தி, 63 நாயன்மார்கள், சரஸ்வதி மற்றும் லெட்சுமி, வெள்ளியம்பல நடராஜர், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் உள்ளிட்ட 4147 தெய்வங்கள் உள்ளனர். இவர்களின் சன்னதியில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் உள்ள தங்க கொடி மரத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாகவேள்வி நடக்கிறது. பின்பு கலசங்கள் புறப்படாகி 7.40 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சன்னதிகளில் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 7.55 மணிக்கு மூலவர்கள் மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாகவே மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரங்களில் மனதை கவரும் வகையில் ஒளி வெள்ளத்தில் காட்சியளிக்கிறது. மேலும் கோவில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன.
நகரின் எங்கிருந்து பார்க்கும் வகையில் கோவில் கோபுரங்கள் லேசர் விளக்குகளால் ஒளி பாய்ச்சப்படுவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக மாசி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகளில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சுழற்சி முறையில் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோவில் சார்பில் பொது மக்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றவர்கள் ஆவணி மூல வீதிகளிலும் மற்றும் எல்.இ.டி. திரைகள் மூலமாகவும் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வர அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.