மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் அதன் சிறப்புகளும்

மீனாட்சி கோவிலுக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள்.
Madurai Meenakshi Amman Temple
Published on
Summary

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இந்துக் கோவிலும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஈடானது அல்ல என்று உரக்கச் சொல்லலாம். அந்த அளவுக்கு, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், ஏராளமான தனிச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு, தலைசிறந்து விளங்குகிறது.

நாளை மகா கும்பாபிஷேகம்

'அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்' என்ற பெயரைப் பெற்று இருந்தாலும், இந்தக் கோவில், மக்கள் அனைவராலும் 'மீனாட்சி கோவில்' என்றே அழைக்கப்படுவது. மீனாட்சி அம்மனின் அருள் சார்ந்த ஆளுமையைப் பறைசாற்றுகிறது.

உலகின் 8-வது அதிசயம் என்ற பெருமைக்குப் போட்டியிட்டபோது, லட்சக்கணக்கானவர்களின் வாக்குகளைப் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் மகாகும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற இருக்கிறது.

இதற்கு முன்னதாக, 1481-ம் ஆண்டு, இந்தக் கோவிலில் உள்ள மீனாட்சி சந்நிதிக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், டெல்லியில் இருந்து வந்த சுல்தானியப் படைகளால் சேதப்படுத்தப்பட்டது.

விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணர், சீரழிந்து கிடந்த கோவிலை சீர்செய்து, மீனாட்சி சந்நிதிக்கு மட்டும் கும்பாபிஷேகம் செய்தார். அதன்பிறகு 1706-ம் ஆண்டு முதல் 1732-ம் ஆண்டு வரை மதுரையை ஆட்சி செய்த விஜயரங்க சொக்கநாதர், சுவாமி சந்நிதிக்கு கும்பாபிஷேகம் நடத்தினார்.

திருஞானசம்பந்தரின் வரிகள்

மீனாட்சி கோவிலுக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள இந்து ஆன்மிகவாதிகளை மீனாட்சி அம்மன் கோவில் ஈர்த்துக் கொண்டு இருப்பதற்குக் காரணம், இந்தக் கோவிலின் அசாத்தியமான தனிச் சிறப்புகள்தான்.

அந்தச் சிறப்புகளின் பட்டியல் மிக நீளமானது. எந்த இந்துக் கோவிலிலும் இல்லாத வழக்கமாக இந்தக் கோவிலில் அன்னை மீனாட்சிக்கே முதல் மரியாதை. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் உருவாக்கப்பட்டபோது, சொக்கநாதருக்கு மட்டுமே சந்நிதி அமைக்கப்பட்டு இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகே, அங்கு மீனாட்சியின் உருவம் வைக்கப்பட்டது. 6-ம் நூற்றாண்டு அளவில், சொக்கநாதரும், மீனாட்சியும் ஒரே சந்நிதியில் இருந்திருக்கக்கூடும் என்பதை, திருஞானசம்பந்தரின், 'அங்கையற்கண்ணி உடனுறையும் அலவாய் அண்ணலே' என்ற வரிகள் உணர்த்துகின்றன.

அன்னையின் ஆட்சி

12-ஆம் நூற்றாண்டில்தான், சொக்கநாதரின் சந்நிதிக்கு வலது புறம் மீனாட்சிக்கு தனிச் சந்நிதி முதல் முறையாக அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது முதல், கோவிலில் அன்னை மீனாட்சியின் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அன்னை மீனாட்சிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்த பிறகே சுந்தரேசுவரருக்கு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்களும், முதலில் வழிபடுவது அன்னை மீனாட்சியைத்தான். மீனாட்சியை வணங்கிய பிறகே சொக்கநாதரை வணங்கும் வழக்கம். பக்தர்களால் பன்னெடுங்காலமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இது எந்தக் கோவிலிலும் இல்லாத வழிபாட்டு முறை.

மதுரை நகரின் நடுமையமாக மீனாட்சி அம்மன் கோவில் அமைந்து இருக்கிறது. கோவிலைக் கட்டிய பிறகு. அதனைச் சுற்றிலும் வீதிகளும், குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டதால், மதுரை நகரும், கோவிலும் தாமரைப்பூ வடிவத்தில் காட்சி அளிக்கின்றன. தாமரைப்பூவின் நடுவில் இருக்கும் பொட்டு போல மீனாட்சி அம்மன் கோவிலும், தாமரையின் விரிந்த இதழ்கள் போல, கோவிலைச் சுற்றி நகரின் வீதிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

முடிவில்லா சிறப்பு

கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுமான அமைப்பை வேறு எந்த நகரிலும் காணமுடியாது. இப்போது மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்க்கும்போது, அதன் கட்டுமானங்கள் அனைத்தும் யாரோ ஒருவரால் திட்டமிட்டு ஒரே சமயத்தில் கட்டியது போலத் தோற்றம் அளிக்கும்.

ஆனால், 18 நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய கோவிலாகக் கட்டப்பட்ட இந்தக் கோவில், பிறகு பல நூறு ஆண்டுகளில் பலரது முயற்சியால் ஒவ்வொரு பகுதியாகக் கட்டப்பட்டு, இப்போதுள்ள அளவுக்கு முழுமை அடைந்துள்ளது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். 1,800 ஆண்டுகளாக, சிறுகச் சிறுக கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில்தான் இப்போது பிரமாண்டமான கோவிலாகக் காட்சி அளிக்கிறது.

மீனாட்சி அம்மன் கோவிலின் தனிச் சிறப்புகளைப் பட்டியலிட்டால் அவற்றுக்கு முடிவே இருக்காது. நாள்தோறும், இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து வரும் ஏராளமான பக்தர்களே கோவிலின் சிறப்புகளுக்குச் சாட்சியாக உள்ளனர். பல நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் மீனாட்சி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெறும் நன்னாளில் நாமும் அம்மனையும், சொக்க நாதரையும் வழிபட்டு பெருவாழ்வு பெறலாம்.

- அமுதன்

X

Maalai Malar
www.maalaimalar.com