இன்றைய இளம் தலைமுறையினர் நெற்றியில் திலகம், குங்குமம் வைப்பதை மூடநம்பிக்கையாக கருதுகிறார்கள். சிலர், கண்ணுக்கே தெரியாமல் மிகச்சிறிய புள்ளியாக வைத்து கொள்கின்றனர். ஆனால், சைவ சமயத்தின் அடையாளமாக விளங்குவது திருநீறு எனப்படும் விபூதியாகும்.
'மந்திரமாவது நீறு' என்று திருஞானசம்பந்தர் போற்றிய இந்த திருநீற்றை நெற்றியில் அணிவதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பின்னணியையும், வியக்கத்தக்க அறிவியலையும் அறிந்து கொள்வோம்.
விபூதி என்பது நிலையற்ற உலக வாழ்க்கையையும், 'மனிதன் இறுதியில் சாம்பல்தான்' என்ற உண்மையையும் உணர்த்துகிறது. நெற்றியில் மூன்று கோடுகளாக (திரிபுண்டரம்) திருநீறு அணியும்போது, நம்மிடம் உள்ள ஆணவம், செய்த பாவவினைகள், உலகப் பேராசை (மாயை) ஆகிய தீய குணங்களை நீக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
புருவ மத்தியான ஆக்ஞா சக்கரத்தில் விபூதி இடுவதால், தீய எண்ணங்கள், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும். மன அழுத்தத்தைக் குறைத்து, நெற்றியை ஆன்மிகக் குளுமையோடு வைத்திருக்கும் இந்த திருநீறு, இறைவனின் பேரருளை ஈர்க்கும் சக்தியாக திகழ்கிறது.
நம் இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதி (ஆக்ஞா சக்கரம்), அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் இடமாகும். அங்கு விபூதி வைக்கும்போது, உடலின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவதோடு, தலைவலி, சைனஸ், சளி போன்ற தொல்லைகள் வராமல் தடுக்கிறது. மேலும், இப்பகுதியின் பின்புறம் அமைந்துள்ள 'பீனியல்' சுரப்பியைத் தூண்டி, நல்ல உறக்கத்திற்கு வித்திடுகிறது. முக்கியமாக, நெற்றிப் பகுதியில் உள்ள மிக நுட்பமான நரம்புகளைத் தூண்டுவ தன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
விபூதியை கீழே சிந்தாமல் அணிய வேண்டும். திருநீறு, உடலுக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்திற்கு அமைதியையும் தரும் ஓர் உன்னத அருமருந்து. ஆன்மிக ஒழுக்கத்தையும் ஆரோக்கிய வாழ்வையும் ஒருசேர வழங்கும் விபூதியை நாம் தினமும் நெற்றியில் அணிந்து, இறைவனின் பேரருளைப் பெறுவோம்.