விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரியில் சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மதுரை ஐகோர்ட் உத்தரவின்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி பக்தர்கள் நாள்தோறும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் சதுரகிரிக்கு நாள்தோறும் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு முந்தைய நடைமுறை படி மாதத்தில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்படும் என உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து வனத்துறையும் அமாவாசை, பவுர்ணமி நாட்களை தவிர மற்ற நாட்களில் வர வேண்டாம் என அறிவுறுத்தியது. ஆனாலும் ஏராளமான பக்தர்கள் ஐகோர்ட்டு உத்தரவு பற்றி அறியாமல் சதுரகிரிக்கு நாள்தோறும் வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்தது.
அதன்படி சனிப்பிரதோஷமான இன்று சதுரகிரிக்கு செல்ல அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். காலை 6 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர். சனிப்பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுவதால் இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 4 மணிக்கு சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.