தமிழகத்தில் தொழில் நகரங்களாக பல ஊர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் கொங்கு மண்டலத்தில் கரூருக்கு தனிப்பெருமை எப்போதுமே உண்டு, அதுதான் உண்மை என்பது அனைவரும் அறிந்ததே. தொழில் வளர்ச்சியை போன்றே கரூர் ஆன்மீகத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பல்கி பெருகி தழைத்தோங்கி உள்ளது.
கருவூர் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் காலப்போக்கில் கரூராக மருவியது. அதனை இன்றளவும் தனது பேரருளால் இவ்வுலகிற்கு நிரூபித்து அருள்பாலித்து வருகிறாள். கண்கண்ட தெய்வமாகவும், சக்தியின் வடிவமாகவும் திகழும் கரூர் மாரியம்மன்.
கரூர் நகரின் மையப்–பகுதியில் கோவில் கொண்டுள்ளார் மாரியம்மன். மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்படுகிறார். ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார். அன்னை மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாள். கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கோவிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற் போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் விசேஷ பூஜை, அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து மாரியம்மனை வணங்குவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோவில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது. மனிதனுக்கான பிறப்பு என்பது எப்போதுமே அன்னையின் வயிற்றில் தான்.
அதேபோல் மறைவது பூமித்தாயின் வயிற்றில் தான் என்பது உலகறிந்த உண்மை. எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.
மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது. வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா இந்த கோவிலின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அவர் தம் குறைகளைப் போக்கி எல்லையில்லா ஆனந்தம் அளிப்பவள் இந்த அம்மன் என அனைவருமே அவளைப் போற்றுகின்றனர். ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து பல திருவிழாக்களைக் காணும் கரூர் மாரியம்மன், தன்னை வந்து தரிசிக்கா விட்டாலும், தன்னை நினைத்து வணங்கு பவரின் கவலைகளையும் கரைக்கக்கூடியவள். பக்தர்கள் குறைகளை காற்றாக மாற்றி அவர்களை அண்டவிடாமல் செய்து அருள்பாலிக்கும் கரூர் மாரியம்மனை நாமும் மனதுருகி வேண்டி வளம் பல பெறுவோம்.