ஆன்மிக களஞ்சியம்

அருணகிரிநாதர் குருபூஜையை முன்னிட்டு திருமலைக்கேணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அருணகிரிநாதர் எழுந்தருளினார்.

14-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பக்தி இயக்க கவிஞர் அருணகிரிநாதர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் முருகப் பெருமானின் அருளால் ஆன்மிக மாற்றம் பெற்றதும், முழு வாழ்க்கையையும் முருகனுக்காக அர்ப்பணித்து பக்திப் பாடல்களை இயற்றியும் புகழ்பெற்றவர். இவர் இயற்றிய திருப்புகழ் மிகச்சிறந்த தமிழ் பக்தி இலக்கியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவர் பிறந்த ஆனி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று திண்டுக்கல்லில் முருக பக்தர்களால் ஆண்டு தோறும் குரு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் அருணகிரிநாதர் விழாக்குழு பொறுப்பாளர் ராஜகோபால் தலைமையில், நேற்று இரவு திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கேணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அருணகிரிநாதர் எழுந்தருளினார். திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம், ஏர்போர்ட் நகர், ராஜக்கா பட்டி வழியாக திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. வழி நெடுக பக்தர்களுக்கு பால், பழம், பிஸ்கட் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வழங்கினர்.

தொடர்ந்து இன்று திருமலைக்கேணியில் உள்ள அருணகிரிநாதர் மற்றும் முருகனுக்கு கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து பாதயாத்திரையாக கொண்டு சென்ற தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.