உலகம்

அரபு கட்சிகள் ஆதரவுடன் ஐசன்கோட் பதவியேற்பு? குடிமக்கள் மாற்றத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி கருத்து

67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காடி ஐசன்கோட் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் 67 பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி பெற்றுள்ள நிலையில், புதிய பிரதமர் ஆட்சியமைக்க வரும் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுக்க உள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் கடந்த அக்டோபர் 27 அன்று மொத்தமுள்ள 120 இடங்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அணி 46 இடங்களை பெற்றது.

இஸ்ரேலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நெதன்யாகு கட்சிக்கு ஆதரவளித்து வரும் ஐக்கிய தோரா யூத கட்சி 7 இடங்களை கைப்பற்றியது.

எதிர்க்கட்சியான காடி ஐசன்கோட் தலைமையிலான கட்சி 48 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து அரபு தலைமையிலான கட்சிகள் 19 இடங்களை பெற்றுள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் முன்னிலையில் பெரும்பான்மை கட்சிகள் ஆதரவளிக்க உரிமை கோரப்பட்டது.

அப்போது 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காடி ஐசன்கோட் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முன்னாள் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான கட்சிக்கு 46 பேர் ஆதரவாக வாக்களித்தனர், மேலும் ஐக்கிய தோரா யூத மதம் தலைமையிலான கட்சியை சேர்ந்த 7 உறுப்பினர்கள் வாக்களிப்பை புறக்கணித்துவிட்டனர்.

இஸ்ரேலில் 120 இடங்கள் கொண்ட நெசட் சபையில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவைப்படவுள்ள நிலையில், அரபு கட்சிகளுடன் ஆதரவுடன் ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை ஆதரவை பெற்றிருந்த போதிலும், ஒரு நிலையான கூட்டணியை அமைப்பது சவாலாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமராக ஐசன்கோட் பதவி ஏற்கும் பட்சத்தில், அரபு கட்சிகள் மற்றும் வலதுசாரி மதச்சார்பற்ற கட்சிகளின் நலன்களை திருப்திபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ஜனாதிபதி ஹெர்சாக் கூறுகையில், “ஆலோசனைகளின் முடிவுகள் தெளிவாகத் தோன்றலாம், ஆனால் அரசாங்கத்தை அமைக்கும் திறன் யாருக்கு உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டப்படி எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

அணிகளுக்கு இடையேயும், அணிகளுக்கு உள்ளேயும் உள்ள மாற்று கருத்துகளை கருத்தில் கொண்டால், அந்த அதிகாரம் முழுமையாகத் தெளிவாக இல்லை.

இஸ்ரேல் குடிமக்கள் மாற்றத்தை தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் பதவி விலகும் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது தங்களுக்கு முழுமையான நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

இஸ்ரேலின் அனைத்து குடிமக்களுக்காகவும் பணியாற்ற தொடங்கும் ஒரு தேசிய அவசரகால அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT