மத்திய கிழக்கிலேயே மிக உயரமான பாலம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் அமைந்துள்ளது.
அண்மையில் கட்டப்பட்ட இந்த பாலம் தலைநகர் தெஹ்ரானை மேற்கு நகரமான கராஜுடன் இணைக்கிறது.
136 மீட்டர் உயரமுள்ள இது, மத்திய கிழக்கின் ஒரு "பொறியியல் அதிசயம்" என்று வர்ணிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்த பாலம் பகுதியளவு சேதமடைந்துள்ளது.
தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும் 95 பேர் காயமடைந்ததாகவும் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தாக்குதலின் காட்சிகளை பதிவிட்டு, "ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துவிட்டது.அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. இன்னும் பல தாக்குதல்கள் வரவிருக்கின்றன!. காலம் கடப்பதற்குள் ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்" என்று கூறினார்.
இந்நிலையில் இதற்கு பதிலடியாக அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகளில் உள்ள 8 முக்கிய பாலங்களை தாக்கப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியிட்ட பட்டியலில்
குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே, டாமியா பாலம் மற்றும் அப்தூன் பாலம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாலங்கள் மீதான தாக்குதல், வளைகுடா நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து அமைப்பை முடக்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.