உலகம்

கியூபா முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு அமெரிக்க மாகாண அரசு பிடியாணை: சீனா கடும் கண்டனம்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கியூபாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

கியூபாவின் முன்னாள் அதிபரும், மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான 95 வயதுடைய ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்காவின் புளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்துள்ளது.

கியூபாவின் முன்னாள் அதிபரும், மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான 95 வயதுடைய ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்காவின் புளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று, கியூபாவில் இருந்து தப்பியோடி புளோரிடா செல்ல முயன்றவர்களுக்கு உதவிய "பிரதர்ஸ் டூ ரெஸ்க்யூ" எனும் அமைப்பைச் சார்ந்த இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரவுல் காஸ்ட்ரோ மீது முதல் தரக் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, புளோரிடா மாநில வழக்குரைஞரால் இந்த வார தொடக்கத்தில் இந்தப் பிடியாணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கியூபாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் தரப்பில் வெளியடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கியூபா நாட்டின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக நீதித்துறையானது தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மதிக்கப்படும் கியூபப் புரட்சியின் மூத்த தலைவர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிரான இத்தகைய அழுத்தங்களை அமெரிக்கா உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், கியூபாவின் இறையாண்மையை நிலைநாட்டவும் வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்க்கவும் சீனா தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபா மற்றும் அமெரிக்கா இடையேயான தூதரக உறவுகளில் ஏற்கனவே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலா விவகாரம் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக கியூபா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் வேளையில், அமெரிக்க மாகாண அரசு முன்னாள் அதிபர் மீதே பிடியாணை பிறப்பித்துள்ள நடவடிக்கை சர்வதேச அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கியூபத் தலைவர்களும் இந்த நடவடிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு வெற்று நாடகம் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

SCROLL FOR NEXT