

வரும் காலங்களில் அமெரிக்காவில் பதவியேற்கும் புதிய அதிபர் இஸ்ரேலுக்கு விரோதமாகச் செயல்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.
வரும் காலங்களில் அமெரிக்காவில் பதவியேற்கும் புதிய அதிபர் இஸ்ரேலுக்கு விரோதமாகச் செயல்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தற்போதைய கொள்கைகள் மற்றும் ஆதரவு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், அதற்குத் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இஸ்ரேலுக்குச் சாதகமான சூழல் நிலவும் இப்போதைய காலகட்டத்திற்குள்ளேயே, வரவிருக்கும் சவால்களை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலச் சூழல்களைச் சமாளிக்கும் வகையில், அமெரிக்காவை மட்டுமே முழுமையாக நம்பியிராமல் இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டும் என பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். இதற்காக மேற்காசியா மற்றும் உலகின் பிற பிராந்தியங்களைச் சேர்ந்த பல நாடுகளுடன் அவர் தீவிரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். எந்த ஒரு நாட்டையும் சாராமல், பரஸ்பரம் அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலான ஒரு வலுவான நாடாக இஸ்ரேலை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இஸ்ரேலில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை விளக்கும் சந்திப்பின்போது நெதன்யாகு இந்த முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.