அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில், பொறியாளராக பணியாற்றி வந்த இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர் பிரயுத் ஜெயின் என்பவர் மோசமான முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் கவனித்துக்கொள்ள இந்தியாவிற்கு வந்த நிலையில், அவருக்கு இந்த அதிர்ச்சித் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் பிரயுத் ஜெயினின் தந்தைக்குக் கடுமையான நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, அது தீவிர நுரையீரல் பாதிப்பாக மாறியது.
இதனால் அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ போன்ற அதிநவீன உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தந்தையை கவனித்துக் கொள்வதற்காகவும், மருத்துவச் செலவுகளை கவனிக்கவும் பிரயுத் கடந்த ஜூலை 12 அன்று அவசரமாக இந்தியா திரும்பினார்.
பிரயுத் பணிநீக்கம் செய்யப்பட்டதில் உள்ள மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், நிறுவனத்தின் பங்குகள் அவருக்குக் கைக்கு வரும் 'ஈக்விட்டி கிளிஃப்' காலத்திற்குச் சில வாரங்களுக்கு முன்பே அவரை வேளையில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் மாதம் அவருக்கு இந்த பங்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஓராண்டு உழைப்பிற்குப் பிறகு பங்குரிமை கிடைக்கும் நேரத்தில், நிறுவனம் இலாப நோக்கத்தோடும் உள்நோக்கத்தோடும் அவரை நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தியா வந்த நிலையிலும் பிரயுத் நிறுவனத்தின் வேலைகளில் இருந்து முழுமையாக விலகாமல், தந்தையுடன் இருந்தபடியே தொடர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால், ஜூலை 30 அன்று அவருக்கு வந்த ஒரு சாதாரண போன் காலில், "அடுத்த 15 நாட்களில் உங்கள் வேலை முடிகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை அவருக்கு முறையான பணிநீக்கக் கடிதம் கூட வழங்கப்படவில்லை இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரயுத் அமெரிக்காவில் H-1B விசாவில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க சட்டப்படி, இந்த விசாவில் இருப்பவர்கள் வேலையை இழந்தால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலையைக் கண்டறிய வேண்டும்; இல்லையெனில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இதுகுறித்து பிரயுத் ஜெயின் கூறுகையில். "எனது தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், மருத்துவர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்றார்கள்.
மருத்துவ ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும், நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் என் வாழ்க்கையில் எல்லாமே ஒரே நேரத்தில் நெருங்கி விழுவது போல் இருந்தது. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நம்முடைய சொந்த நிறுவனம் போல நினைத்து உழைக்கச் சொல்கிறார்கள்.
ஆனால் கஷ்ட காலம் வரும்போது ஊழியர்களை துவைத்து தூக்கி எறிகிறார்கள்" என்று வேதனையுடன் லிங்க்ட்இன் பதிவில் தனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.