ஈரான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, ஹார்முஸ் ஜலசந்தியில் உளவு பணியில் ஈடுபட்டிருந்த ‘டைவ் எல்டி’ என்ற அமெரிக்க ஆளில்லா உளவு நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது சமீபத்தில் தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஐந்து ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி அழித்தது.
ஈரானின் வர்த்தக விமான நிறுவனங்கள் நீண்ட காலமாக, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கும், அதனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் 27 ஈரானிய விமான நிறுவனங்களை தனது சிறப்பு குடிமக்கள் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது. இதன்மூலம் ஈரானின் மற்ற அனைத்து விமான நிறுவனங்களையும் அமெரிக்கா தாக்கும் என மறைமுகமாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளை பிரிவு (CENTCOM) கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பலை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்க ஈரான் முயற்சி மேற்கொண்டது.
இந்த முயற்சிகளுக்கு பதிலடியாகவே தாங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க ராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கைப்பற்றியுள்ளது.
இந்த நீர்மூழ்கி கப்பலானது மேல் தளத்திற்கு திரும்பாமல் 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்றும் 6,000 மீட்டர் ஆழம் வரையில் மூழ்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அன்டுரிலின் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான செபா நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேல் பறந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிராந்திய கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, ஒரு நாளுக்கு முன்பு அமெரிக்க ஆளில்லா விமானங்களில் ஒன்று செயல் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் குறித்து கூறுகையில், தரவுகளை சேகரிக்கவோ அல்லது ரகசிய சோனார் மற்றும் ரேடார் கருவிகள், அந்த ட்ரோனில் இடம்பெறவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் வருந்தும் வரை, ஈரான் தனது எதிர்ப்பை வலிமையுடன் தொடரும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரான் அரசு எப்போதுமே போரை எதிர்த்து தான் வந்துள்ளது.
போர் வெறியை தவிர்ப்பதன் மூலம், மக்களின் நலன்களை பாதுகாத்து, நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என ஈரான் நம்புகிறது.
இருப்பினும், ஈரான் இன்றுவரை ஆக்கிரமிப்புக்கு எதிராக துணிச்சலுடன் போராடி கொண்டு தங்கள் நாட்டை தற்காத்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையாக வருந்தும் வரை, ஈரான் இந்த எதிர்ப்பை வலிமையுடன் தொடரும்.
ஈரான் தனது நாட்டு மக்களின் உரிமைகளின் பாதுகாவலராக என்றும் நிலைத்திருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.