ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விதித்த இரண்டு நிபந்தனைகள் குறித்து, கத்தார் பிரதமர் ஷேக் முகமது ஈரானில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சில மாதங்களாக நடைபெற்று வரும் சூழலில், தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் சில நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.
இரு நாடுகளும் நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்காத்தால் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த காலத்தில் அமெரிக்கா விதித்த நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதில் ஈரான் கையிறுப்பில் வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மூன்றாவது நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும்; அல்லது ஈரான் தனது கைவசம் வைத்துள்ள யுரேனியத்தின் அளவை குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா ஈரானுக்கு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஈரான் ஏழு நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் முன்மொழிந்த நிபந்தனைகளை, ஈரான் பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாயிடம், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்ஸிம் அல் தானி தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று அமெரிக்கா சார்பாக கத்தார் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதேபோன்று அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில், துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் அந்த பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் கடல்வழி பாதைகள் குறித்த கவலைகளை துருக்கி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் துருக்கி மற்றும் கத்தார் அரசாங்கங்களின் முன்னெடுப்பின் மூலம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது.