தேர்தலில் ஜனநாயகக் கட்சி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மஸ்க்கின் இந்தச் சமூக வலைதளப் பதிவு பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், தன்னைத்தானே கேலி செய்து கொண்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலில் ஜனநாயகக் கட்சி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மஸ்க்கின் இந்தச் சமூக வலைதளப் பதிவு பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியை ஆதரிப்பதற்காக எலான் மஸ்க் Elon Musk கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை (சுமார் $474 மில்லியன்) வாரி இறைத்திருந்தார். தேர்தல் பிரசார நிதி வரலாற்றில் தனிநபர் ஒருவரால் செய்யப்பட்ட மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவ்வளவு பெரிய நிதி உதவியும் குடியரசுக் கட்சியைத் தோல்வியிலிருந்து காப்பாற்ற உதவவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், "தேர்தலில் தலையிடும் எனது விண்வெளி லேசர்கள் இந்த முறை வேலை செய்யவில்லை போலிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் பரவும் தேர்தல் தலையீடு குறித்த சதித் கோட்பாடுகளைக் கிண்டல் செய்யும் வகையிலும், தனது பெருமளவிலான தேர்தல் நிதி முதலீடு தோல்வியடைந்ததை நையாண்டி செய்யும் வகையிலும் அவர் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக மஸ்க் செய்த நிதி உதவிகள் பெரும்பான்மை இடங்களில் பலனளிக்கவில்லை. குறிப்பாக, டெக்சாஸ் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி மற்றும் டேட்டா சென்டர் விரிவாக்கங்களுக்கு எதிரான அரசியல் மாற்றங்களைக் குறிப்பிடும் வகையில், விண்வெளியில் டேட்டா சென்டர்களை அமைப்பது பற்றி யோசிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் மற்றொரு பதிவில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியிருப்பது அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்குப் பெரும் அரசியல் பின்டைவாகக் கருதப்படுகிறது. குடியரசுக் கட்சியை வெற்றி பெறச் செய்ய எலான் மஸ்க் செய்த கோடிக்கணக்கான டாலர் முதலீடுகள் தோல்வியில் முடிந்துள்ளதை, அவரது நையாண்டிப் பதிவுகள் தற்போது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.