

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஈரான் தூதரகம் கடுமையாக விமர்சித்துள்ளது. தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், டிரம்ப்பை குப்பைத் தொட்டியில் வீசுவது போன்ற கார்ட்டூன் வீடியோவை ஈரான் வெளியிட்டிருப்பது சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவில் நிலவிவரும் வாழ்க்கைச் செலவு உயர்வு, சுங்க வரிக்கான கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் ஆகியவை பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிருப்தியே தேர்தலில் எதிரொலித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகத் தேர்தலின் முடிவு டிரம்ப்பிற்கு எதிரான கடுமையான மக்கள் தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், 'டிரம்ப்' என்று பெயரிடப்பட்ட பொருள் ஒன்றை 'ஆபத்தான கழிவு' (Hazardous Waste) என்று குறிக்கப்பட்ட குப்பைத் தொட்டிக்குள் போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் பதற்றத்தின் மத்தியில், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக ஈரான் இந்த நையாண்டிப் பதிவை வெளியிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளின்படி, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டையும் ஜனநாயகக் கட்சி தன்வசம் ஆக்கியுள்ளது. இந்த வபெரும் வெற்றி மூலம், டிரம்ப்பின் இறுதி இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அவரது சட்டமூலங்களை முடக்குவதற்கும், நீதிபதி நியமனங்கள் மற்றும் மூத்த அரசாங்கப் பதவிகளுக்கான பரிந்துரைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு முழு அதிகாரம் கிடைத்துள்ளது. மேலும், ஈரானுக்கு எதிரான போர் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவும் இந்த வெற்றி வழிவகுத்துள்ளது.
தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயகக் கட்சியினர் நன்றாகப் போராடி வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தாலும், இந்தத் தோல்வி தனக்கு எதிரானதாகக் கருதவில்லை என்று தற்காத்துக்கொள்ள முயன்றுள்ளார். எனினும், ஜனநாயகக் கட்சியினர் நிறைவேற்றும் சட்டங்களுக்கு எதிராகத் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் என்று அவர் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்த அரசியல் மாற்றங்கள் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் மட்டுமின்றி, சர்வதேச உறவுகளிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.