அமெரிக்காவில் வணிக வளாகத்தில் வைத்து இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் 15 முறை கத்தியால் குத்தப்பட்ட மதவெறி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த சொஹைல் என்ற வாலிபர், அமெரிக்காவின் உட்டாவின் வெஸ்ட் வேலி சிட்டியில் உள்ள Valley Fair Mall என்ற வணிக வளாகத்தில் இருக்கும் நகைக்கடையில் பணியாற்றி வந்தார்.
கடந்த திங்கட்கிழமை அன்று சொஹைல் வழக்கம் போல பணியில் இருந்தபோது, அங்கு வந்த பீட்டர் மைக்கேல் லார்சன் என்ற 48 வயது நபர் குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் கேட்டுள்ளார்.
சொஹைல் தண்ணீரை எடுப்பதற்காக திரும்பிய கணத்தில், அந்த நபர் திடீரென சொஹைலை கத்தியால் சரமாரியாகக் குத்தத் தொடங்கியுள்ளார்.
தாக்குதலுக்கு முன்பாக, அந்த நபர் சொஹைலிடம், 'நீ எந்த ஊர்?' என அவரது அடையாளம் குறித்து பல கேள்விகளை கேட்டதாக அவரது சக ஊழியர் லூனா நுனிஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த நபரின் கேள்விக்கு சொஹைல், 'நான் இந்தியாவைச் சேர்ந்தவன், என் பெயர் சொஹைல்' எனக் கூறியுள்ளார்.
உடனே அந்த நபர், 'நீ முஸ்லிமா?' எனக் கேட்க, சொஹைல் 'ஆம்' என்று சொன்ன நிலையில், அந்த நபர் கத்தியால் அவரை கொடூரமாக குத்தியுள்ளார்.
காவல்துறை அறிக்கையின்படி, சொஹைலின் உடல் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக் குத்து விழுந்துள்ளதால் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சோஹைலை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சொஹைல் பணிபுரியும் கடையின் உரிமையாளர் அட்னான் முகமது கூறுகையில்,
"அவர் 2 குழந்தைகளுக்கு தந்தை. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தினமும் உழைக்கும் ஒரு எளிய மனிதர். அவரது குழந்தைகள் வீட்டில் தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என் உயிரைக் கொடுத்தாவது அவரைக் காப்பாற்றியிருப்பேன். உலகிற்கு வெறுப்பு தேவையில்லை; அன்பு மட்டுமே வேண்டும். மனிதநேயமே எல்லாவற்றையும் விட முதன்மையானது" என பேசியுள்ளார்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சொஹைலின் மருத்துவச் செலவிற்காக அவரது நண்பர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
தாக்குதலை நடத்திய 48 வயது பீட்டர் மைக்கேல் லார்சனை போலீசார் கைது செய்து சால்ட் லேக் கவுண்டி சிறையில் அடைத்துள்ளனர்.