America Iran War
உலகம்

அமெரிக்கா-ஈரான் போரால் விண்ணை தொடும் அத்தியாவசியப்பொருட்கள் விலை!

நிலைகுலையும் உலக வர்தகம் - ஹார்முஸ் நீரிணை அடைப்பால் எரிபொருள் மற்றும் மளிகை விலை உயர்வு.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் வெடித்த போர், 6 மாதங்களை எட்டவுள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தொடக்கத்தில் ராணுவத் தாக்குதலாக மட்டுமே பார்க்கப்பட்ட இந்த மோதல், தற்போது சாதாரண மனிதனின் அமைதியான வாழ்க்கையிலும், சமையலறையிலும் தன் கொடூரக் கரங்களை நீட்டியுள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்களின் சத்தம் ஓய்ந்த பின்னரும், அதன் விளைவாக உருவான விலைவாசி உயர்வும் நிதிப் பற்றாக்குறையும் உலக நாடுகளைத் திணறடித்து வருகின்றன.

எரிபொருள் விலை உயர்வு:

இந்த போரினால் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டுள்ள ராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, சாதாரண நுகர்வோரின் பாக்கெட்டுகளைப் பதம் பார்க்கும் வகையில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் வணிகக் கப்பல்கள் சென்று வரும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் அடைத்துள்ளதால், சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்வழியை மீண்டும் திறக்க அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

பென்டகனில் நிதியிழப்பு ஆயுத பற்றாக்குறை:

போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்காவின் பென்டகன் அமைப்பில் கடுமையான நிதியிழப்பும், ஆயுதப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இடையே கடந்த வாரம் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

செப்டம்பருக்குள் 37.5 பில்லியன் செலவாகும்:

கெட்டவர்களை ஒழிக்கப் பணம் தேவைப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடந்த மார்ச் மாதம் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானிய இலக்குகள் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலுடன் தொடங்கிய இந்தப் போரில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் 37.5 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஈரான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அமெரிக்க ராணுவத் தளங்களின் இழப்புகள் சேர்க்கப்படவில்லை.

காலியான ஆயுத கிடங்குகள்

போரைத் தொடரவும், காலியான ஆயுதக் கிடங்குகளை மீண்டும் நிரப்பவும் 67 பில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்குமாறு பீட் ஹெக்செத் கோரிக்கை விடுத்தார்.

இதையேற்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை 73 பில்லியன் டாலர் நிதியை ஒப்புக்கொண்டது. இருப்பினும், இதில் முழுத் தொகையும் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் செல்லாது என்பதால், கோடைக்கால இடைவேளைக்கு முன்பாக அமெரிக்க மேலவை இதைத் தற்காலிகச் செலவின மசோதாவுடன் நிறைவேற்ற அவசரம் காட்டி வருகிறது.

வெடிமருந்து செலவு:

ஆனால், உண்மையான போர்க்காலச் செலவு இதைவிட மிகவும் அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தைச் சேர்ந்த மார்க் கான்சியன் வெளியிட்ட கணிப்பின்படி, ராணுவப் படைகளின் நிறுத்தம், உபகரண இழப்புகள், எரிபொருள் செலவு மற்றும் அடிப்படைச் சேதங்களை மட்டும் கணக்கிட்டால், இந்தச் செலவு 35.2 பில்லியன் முதல் 42.5 பில்லியன் டாலர் வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளுக்காக மட்டுமே 26.1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டு உள்ளது.

ஆயுத இருப்பு குறைந்து செலவு இடைவெளி:

இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை அதிக அளவில் பயன்படுத்தியதால், அதன் சொந்த ஆயுத இருப்பு பெருமளவில் குறைந்துவிட்டது.

ஆனால், ஈரான் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த செலவிலான ஆயுதங்களையே பயன்படுத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்க்காலச் செலவில் மிகப்பெரிய இடைவெளி உருவானது.

பொருளாதார சுமை:

ஆயுதக் கையிருப்பு குறித்த தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதாகக் கருதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இது குறித்து பீட் ஹெக்செத்திடம் விளக்கம் கேட்டுப் போர்க்கொடி உயர்த்தினார்.

இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா 200-க்கும் மேற்பட்ட 'தாட்' ரகத் தடுப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. இது பென்டகனின் மொத்த இருப்பில் பாதியாகும்.

இதில் ஒரு ஏவுகணையின் விலையே 15 மில்லியன் டாலர் வரை இருக்கும் நிலையில், அவற்றை மீண்டும் தயாரிப்பது பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.

5.6 பில்லியன் ஆயுதங்கள் 2 நாட்களில்:

அதேபோல, தோமாஹாக் ரகக் குரூஸ் ஏவுகணைகள் ஒவ்வொன்றும் 2 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்டவை. தற்போது இவற்றின் தயாரிப்புச் செலவு இன்னும் அதிகரித் துள்ளதாக ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் பேராசிரியர் லிண்டா பில்ம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், போரின் முதல் இரண்டு நாட்களில் மட்டுமே 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை பென்டகன் பயன்படுத்தியது. முதல் நான்கு வாரங்களில் 850-க்கும் மேற்பட்ட தோமாஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டன.

ஆனால், அமெரிக்காவில் ஆண்டுக்குச் சில நூறு ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ தளங்கள் சேதம்:

கடந்த ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு தாக்குதல்கள் குறைந்தபோதிலும், செலவுகள் குறைந்தபாடில்லை.

மே மாதத்திற்குள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் 228-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் ஈரானியத் தாக்குதலால் சேதமடைந்ததாகச் செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்கின்றன.

கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங் களைச் சீரமைக்க 5 பில்லியன் டாலர் வரை செலவாகும் என அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் கணித்துள்ளது. மேலும், 42 போர் விமா னங்கள் வரை சேதமடைந்துள்ளதாகக் காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் எபிக் புரி 38.6 பில்லியன் செலவு:

முன்னாள் பென்டகன் அதிகாரியான எலைன் மெக்கஸ்கர் கணக்கீட்டின்படி, 'ஆபரேஷன் எபிக் புரி' போரின் செலவு ஜூன் நிலவரப்படி 38.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

இது ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனின் தலையிலும் தோராயமாக 115 டாலர் கடனைச் சுமத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் நலன், புனரமைப்பு மற்றும் கடன் வட்டி என இந்தப் போரின் நீண்டகாலச் செலவு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்றும், அமெரிக்க மக்கள் இதன் கடனை பல ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் பேராசிரியர் லிண்டா பில்ம்ஸ் எச்சரித்துள்ளார்.

அன்றாட வாழ்க்கை பாதிப்பு:

ராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் இந்தப் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

'டாக்ஸ்பேயர்ஸ் பார் காமன் சென்ஸ்' அமைப்பின் கொள்கை ஆய்வாளர் கேப் மர்பி கூறுகையில், போரின் நேரடிச் செலவுகளை விட மறைமுகச் செலவுகளே வரும் காலத்தில் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்திற்கு 609 டாலர் கூடுதல் செலவு:

பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கக் குடும்பங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக மட்டும் கூடுதலாக 79.8 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளன.

அதாவது ஒரு குடும்பத்திற்குச் சராசரியாக 609 டாலர் கூடுதல் செலவாகி யுள்ளது. மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவ னத்தின் முதன்மைப் பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி கூறுகையில், ஒரு சராசரி குடும்பம் இறுதியில் 1,000 டாலர் வரை போர் சார்ந்த செலவுகளுக்காக இழக்க நேரிடும் என்றார்.

உயர்ந்த விலை உலக பொருளாதார பாதிப்பு:

உயர்ந்துள்ள டீசல் விலை காரணமாகச் சரக்கு போக்குவரத்து, மளிகைப் பொருட்களின் விலை மற்றும் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

வரிக் குறைப்புகள் சில நன்மைகளை அளித்தபோதிலும், போரின் தாக்கம் அதை முறியடித்துவிட்டது. ஹார்முஸ் நீரிணை அடைக்கப்பட்டதால் சர்வதேச போக்குவரத்து சந்தை சீர்குலைந்துள்ள நிலையில், இந்த போரின் முழுமையான உலகளாவிய பொருளாதாரப் பாதிப்பை உடனடியாகக் கணிப்பது மிகவும் கடினம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.