உலகம்

ஈரான் - அமெரிக்கா இடையே இன்று கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம்.. உடனே திறக்கப்படும் ஹார்முஸ்?

எந்தவித தடையுமின்றி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு உடனடியாகத் திறந்து விடப்படும்.

பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் எட்டப்பட்டுள்ளதாகவும், அது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கையெழுத்தாக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்ப்

தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த ஒப்பந்தம் குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், "அன்றைய ஒபாமா அரசு ஈரானுடன் போட்ட ஒப்பந்தம், அந்நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான ஒரு எளிய பாதையை மட்டுமே அமைத்துக் கொடுத்தது.

ஆனால், நாம் இப்போது உருவாக்கப் போகும் புதிய ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ அல்லது தயாரிப்பதையோ முற்றிலும் தடுக்கும்.

புதிய ஒப்பந்தத்தின் மூலம், ஹார்முஸ் ஜலசந்தி எந்தவித தடையுமின்றி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு உடனடியாகத் திறந்து விடப்படும்.

ஈரான் விதிகளை மீறினால் அதன் அணுசக்தி கட்டமைப்புகளை ராணுவ நடவடிக்கை மூலம் முற்றிலுமாக அழிக்க அமெரிக்கா தயங்காது." என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்

அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஒப்பந்தத்தின் இறுதிப் புள்ளிகள் எட்டப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் ஷேபாஸ் ஷெரீப், "இருநாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் தயார் நிலையில் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இதற்கான மின்னணு முறையில் கையெழுத்து நடைபெற வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான்

ஆனால் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி, "ஒப்பந்தத்தின் இறுதி முடிவுகளை ஈரான் இன்னும் முழுமையாக எட்டவில்லை; எனவே ஞாயிற்றுக்கிழமையே அவசரமாகக் கையெழுத்தாக வாய்ப்பில்லை, எனினும் அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு எட்டப்படலாம்" என கூறியுள்ளார்.

அதே வேளையில், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள தங்களின் நிதி ஆதாரங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.