முடிவுறும் போர்? ஈரான் போட்ட 14 நிபந்தனைகள் வெளியீடு - ஒப்புக்கொள்ளுமா அமெரிக்கா?

300 பில்லியன் டாலர் மறுசீரமைப்பு நிதியை அமெரிக்கா தரவேண்டும், ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த விவரங்கள் பகிரப்படாது.
முடிவுறும் போர்? ஈரான் போட்ட 14 நிபந்தனைகள் வெளியீடு - ஒப்புக்கொள்ளுமா அமெரிக்கா?
Published on

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, 14 அம்சங்கள் கொண்ட ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், முன்மொழிவுகளை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஈரானிய ஊடகங்களின் செய்திகளின்படி, பின்வரும் நிபந்தனைகளை ஈரான் அரசு முன்வைத்துள்ளது.

முழுமையான போர் நிறுத்தம்:

லெபனான், காசா உட்பட அனைத்து முனைகளிலும் தற்போதைய போரை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும்.

இறையாண்மைக்கு மதிப்பு:

ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது; அதன் இறையாண்மையை மதிக்க வேண்டும்.

கடற்படை முற்றுகை நீக்கம்:

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடல்வழி வர்த்தக முற்றுகையை 30 நாட்களுக்குள் அமெரிக்கா முழுமையாக நீக்க வேண்டும்.

அமெரிக்கப் படைகள் விலகல்:

ஈரானின் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு:

உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி 30 நாட்களுக்குள் மீண்டும் திறக்கப்படும்.

எண்ணெய் ஏற்றுமதித் தடை நீக்கம்:

ஈரானின் கச்சா எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மீதான பொருளாதாரத் தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு, அதன் வருவாயை ஈரான் முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

$300 பில்லியன் மறுசீரமைப்பு நிதி:

போரினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய, அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஈரானின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு குறைந்தது 300 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க வேண்டும்.

60 நாட்கள் அணுசக்திப் பேச்சுவார்த்தை:

ஈரானின் அணுசக்தி விவகாரம் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தடைகளை முழுமையாக நீக்குவது குறித்து இறுதி முடிவெடுக்க 60 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

அணு ஆயுதத் தடை உறுதி:

ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்கீழ் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும்.

புதிய தடைகளுக்குத் தடை:

60 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா கூடுதல் படைகளைக் குவிக்கக் கூடாது; புதிய தடைகளையும் விதிக்கக் கூடாது.

$24 பில்லியன் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும்:

அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டாலர் நிதியை 60 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும். இதில் பாதியை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே வழங்க வேண்டும்.

சர்வதேச கண்காணிப்புக் குழு:

இந்த ஒப்பந்தத்தின் விதிகள் இரு தரப்பிலும் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு சர்வதேசக் குழு அமைக்கப்படும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்:

இறுதி செய்யப்படவுள்ள இந்த உடன்படிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மூலம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஏவுகணைத் திட்டத்திற்கு விலக்கு:

இந்த இறுதி உடன்படிக்கை ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும்; ஈரானின் ஏவுகணைத் திட்டம் அல்லது அதன் பிராந்திய பாதுகாப்புக் குழுக்கள் பற்றிய விவாதங்கள் இதில் சேர்க்கப்படாது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், ஞாயிற்றுக்கிழமையே இந்த ஒப்பந்தவிழா நடைபெறலாம் என கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தின் பெரும்பாலான பகுதிகள் இறுதி வடிவம் பெற்றுள்ள போதிலும், ஈரானின் உச்ச தலைவர் மற்றும் உயர்மட்டக் குழுக்களின் இறுதி ஒப்புதலுக்காக வரைவு அறிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் வரவேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு ஒப்பந்தமும், ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் அதன் ஏவுகணைத் திறன்கள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டே இருக்கவேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிடம் கூறியுள்ளதும்,

ஈரானுக்கு இழப்பீடு வழங்கும் நிபந்தனையை அமெரிக்கா பலமுறை நிராகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com