டிரம்ப் 
உலகம்

ஈரான் மீதும் ஈரானுக்கு உதவும் நாடுகள் மீதும் பொருளாதார போரை அறிவித்த டிரம்ப்

இதைச் செய்பவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும்.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை எதிர்த்து இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரி கடைசியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. முதல் நாள் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.

அழுத்தம்

இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் தாக்கியது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தியது. இதனால் உலகளவில் நெருக்கடி ஏற்பட்டதால் போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்காவுக்கு அதிகரித்தது.

இருப்பினும் ஈரான் உடன்பாட்டுக்கு வர மறுப்பதால் போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட போர் நிறுத்தமும் தோல்வியில் முடிந்தது.

இரு தரப்பு இடையே மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு பல்வேறு அழுத்தங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்து வருகிறார்.

புதிய பொருளாதார தடைகள்

இந்த நிலையில் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள டிரம்ப், ஈரானுக்கு உதவும் நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்ப தாவது,

"ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள என்னை விட சிறந்த வாய்ப்பை வேறு யாரும் வழங்கவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஈரான் தவறிவிட்டது.

எனவே நான் ஒரு நாட்டின் மீது இதுவரை மேற்கொள்ளப் பட்டதிலேயே மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவிக்கிறேன்.

இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் மற்றும் தனிமைப்படுத்தலாக அமையும். ஈரானின் கடற்படை செயலிழந்துவிட்டது. விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டது.

ராணுவத் தொழிற்சாலைகள் இடிபாடுகளாகிவிட்டன. அவர்களின் நாணயம் மதிப்பற்றதாகிவிட்டது. அந்த நாடு மிக மோசமான நிலையில் ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஈரானுக்குத் தேவையான எந்தவொரு வாழ்வாதார உதவியையும் வழங்க தங்கள் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகளை அனுமதிக்கும் எந்தவொரு நாடும், மிகப்பெரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை நான் அறிவிக்கிறேன்.

எண்ணை கடத்தல், பணப்பரிமாற்றங்கள், நாணயப் பரிமாற்ற நிலையங்கள், கப்பல் பதிவு சேவைகள், பினாமி நிறுவனங்கள் என அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதைச் செய்பவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். இது பொருளாதார ரீதியாக ஒரு தீர்க்கமான மற்றும் மிக முக்கியமான நடவடிக்கை நாளாக அமையும்.

ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்கவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் அமெரிக்காவுடன் நட்பு நாடுகள் அனைத்தும் ஒன்றி ணைந்து நிற்க வேண்டும்.

அவர்கள்(ஈரான்) இப்போது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் அவர்களை முடக்குவதுடன் அவர்களின் திறனையும் அழித்துவிடும். ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது" எனத் தெரிவித்தார்.