மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்ட நிலையில் இறுதி ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தை சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்தது.
இதற்கிடையே இருநாடுகளும் மீண்டும் பரஸ்பர மோதலில் ஈடுபட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் அனுமதியின்றி செல்ல முயன்ற சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் கடந்த 25-ந் தேதி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் ஏவுகணை, டிரோன் தளங்கள், கடலோர ரேடார் மையங்கள் மீது அமெரிக்க போர் விமானம் நேற்று குண்டுகளை வீசி தாக்கியது. இதையடுத்து பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை நடத்தியது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே பனாமா கொடியுடன் சென்ற எம்.டி கிகு என்ற எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியது.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா 2-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்தது. இதில் ஈரானின் 10 இடங்களிள் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரானின் குவாசம் தீவில் உள்ள சிரிக் நகர், ஹர்முஸ்கன் மாகணத்தில் உள்ள பண்டர் இ லெங்கா ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ தளங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவம் கூறும்போது, ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் உள்ள 10 ஈரான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன.
ஈரானின் ராணுவக் கண்காணிப்பு உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு அமைப்புகள், வான் பாதுகாப்புத் தளங்கள், டிரோன் சேமிப்பு நிலையங்கள் மற்றும் கண்ணிவெடி அமைக்கும் திறன் கொண்ட தளங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.
கிகு கப்பல் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதற்கான வாய்ப்பு ஈரானுக்கு இருந்தும், அதை செய்யாமல் தவிர்த்துவிட்டது என்று தெரிவித்தது.
அமெரிக்காவின் தாக்கு தலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈரான் மீண்டும் இறங்கியது. குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானப்படைத் தளம் மற்றும் பக்ரைனில் உள்ள சல்மான் துறைமுகத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகத்தை குறிவைத்து ஏவுகணை- டிரோன்கள் வீசப்பட்டன.
அவற்றை தடுக்க வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. இதில் ஏவுகணைகள், டிரோன்கள் இடைமறிக்கப்பட்டன. மேலும் குவைத், பக்ரைனில் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதால் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் பதட்டம் அதிகரித்து இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சேமிப்பு இடங்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. அவர்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது மிகவும் சாத்தியமாக உள்ளது. நாம் இனிமேலும் நியாயமாக இருக்க முடியாத ஒரு நிலை வரலாம். அப்போது நாங்கள் மிகவும் வெற்றிகரமாகத் தொடங்கிய பணியை ராணுவ ரீதியாக முடிக்க நிர்பந்திக்கப்படலாம். அப்படி நடந்தால் ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும். இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.
ஈரான் ராணுவத்தின் கூட்டு செயல்பாட்டுத் தலைமையகமான கதம் அல்-அன்பியாவின் ராணுவ செய்தி தொடர்பாளர் இப்ராகிம் அல்-பிகார் கூறியதாவது:-
எந்தவொரு புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் கடுமையான பதிலடியை ஈரான் கொடுக்கும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஹோர்முஸ் ஜலசந்தியில் கடல்வழிப் போக்குவரத்தை ஈரான் ஒழுங்குபடுத்தும்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வன்முறையில் ஈடுபடும் கப்பல்கள் மீது முன்னெப்போதையும் விடக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் ஈரானின் கடற்கரை கண்காணிப்பு நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறும் செயலாகும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இத்துடன் அமெரிக்காவின் கண்மூடித்தனமான தாக்குதல்கள், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரான் கட்டுப்பாட்டைக் குலைக்காது. வரும் நாட்களில் இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் நரகத்தை அனுபவிக்கும் என்று ஈரான் கடற்படை எச்சரித்துள்ளது.