அமெரிக்காவில் ஐசிஇ அதிகாரி ஒருவர் கிரீன் கார்டு பெற்றுத் தருவதாக கூறி தனக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததாக லெபனானை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் குடியேற்றங்களை கட்டுப்படுத்த டிரம்ப் அரசு கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. சட்டபூர்வ குடியேற்றத்திற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் அமெரிக்க அரசு, சட்ட விரோத குடியேறிகளை நாடுகடத்தவும் தீவிர வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
சட்டவிரோத குடியேற்றங்களை கண்டறிந்து கைது செய்ய அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரிகளுக்கு ஏகபோக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஐசிஇ அதிகாரிகள் பல சமயங்களில் மனிதாபிமானமற்று நடந்து கொள்வதாக அமெரிக்க மக்களிடையேயும் விமர்சனம் இருந்து வருகிறது.
இந்த சூழலில் ஐசிஇ அதிகாரி ஒருவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததாக லெபனானை சேர்ந்த 21 பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஹப் அலி அல்மெர்ஹிஜ் எனும் அப்பெண் கடந்த மே மாதம் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்போது மெக்சிகோவில் வசித்து வருகிறார்.
முன்னதாக அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ஐசிஇ அதிகாரி மார்கெல் வாலஸ் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தற்போது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னுடன் பாலியல் உறவு கொண்டால் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கும் உரிமையை வழங்கும் கிரீன் கார்டு வழங்குவதாக அந்த அதிகாரி ஆசை காட்டியதாகவும், இல்லையென்றால் தன் கணவரை சிறையில் அடைத்து நாட்டைவிட்டு வெளியேற்றுவதாக மிரட்டியதாகவும் ரஹப் அலி தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரி தன் கணவரைப் பற்றி, "உன் கணவர் வயதானவர், உங்களால் எதையும் செய்ய முடியாது" என்று கூறியதாகவும் ரஹப் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் ICE முகமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஹப் மெக்சிகோவில் உள்ள நிலையில் அவரின் கணவர் சாம் வைஸ் டெக்சாஸில் வசித்து வருகிறார்.