2022 இல் போர் தொடங்கியது முதல் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 8,500க்கும் மேற்பட்ட ரஷியப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் சேர்வது தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என தெரிவித்து ரஷியா அந்நாடு மீது கடந்த 2022 பிப்ரவரியில் தாக்குதல் நடத்தியது.
அதுமுதல் முடிவின்றி உக்ரைன் - ரஷியா போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில் 2022 பிப்ரவரி முதல் 2026 ஜூன் 30 வரை ரஷிய எல்லைகளுக்குள் உக்ரைன் ராணுவம் நடத்திய
தாக்குதல்களில் 8,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புத் தூதர் ரோடியன் மிரோஷ்னிக் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, உக்ரைன் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 373 பேர் குழந்தைகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஒட்டுமொத்தமாக சுமார் 30,913 ரஷிய பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரஷியாவின் 42 பிராந்தியங்களில் உள்ள சிவிலியன் உள்கட்டமைப்புகளை உக்ரைன் இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் பொதுமக்கள் வாழும் இடங்களை குறிவைத்து உக்ரைன் நடத்தும் தாக்குதல் குறித்து உரிய சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஐநா மனித உரிமைகள் உயர் அலுவலகத்திற்கு ரஷியா கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள உக்ரைனின் முக்கிய ராணுவ தளம் அமைந்துள்ள கான்ஸ்டான்டினோவ்கா நகரை ரஷ்யப் படைகள் தங்களது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ரஷிய அதிபர் புதின், "எதிரி தனது தாக்குதல்களை அதிகரிக்க அதிகரிக்க, ரஷிய எல்லைகளை பாதுகாக்க உக்ரைனின் நிலப்பரப்புகளை கைப்பற்றி அங்கு ஒரு பிரம்மாண்டபாதுகாப்பு வளையத்தை நாம் உருவாக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்துள்ளார்.