முந்தைய நாள், பின்லாந்து வளைகுடாவில் ரஷ்ய ராணுவத்துடன் தொடர்புடைய 'அங்காரா' சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் ஐரோப்பாவின் எல்லைகளைத் தாண்டிப் பல்வேறு அரங்குகளிலும் ரஷிய சொத்துகளைத் தாக்கும் உக்ரைனின் திறன் வெளிப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள போர்க்களத்திற்கு சுமார் 1,500 மைல் தொலைவில், லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கடற்படையின் நவீன போர்க்கப்பலான 'மெர்குரி' உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏழு கடற்படை ட்ரோன்கள் மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்திய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, லிபியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதை முதன்முறையாக அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு முந்தைய நாள், பின்லாந்து வளைகுடாவில் ரஷ்ய ராணுவத்துடன் தொடர்புடைய 'அங்காரா' சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் ஐரோப்பாவின் எல்லைகளைத் தாண்டிப் பல்வேறு அரங்குகளிலும் ரஷிய சொத்துகளைத் தாக்கும் உக்ரைனின் திறன் வெளிப்பட்டுள்ளது.
கிழக்கு லிபியாவில் உள்ள பெங்காசி கடற்படைத் தளத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த மெர்குரி கப்பலுக்கு எதிராக, உக்ரைன் பாதுகாப்புச் சேவை மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து ஏழு கடற்படை ட்ரோன்களை ஏவின. ஆளில்லா, வெடிபொருள் நிரப்பப்பட்ட இந்தப் படகுகள் போர்க்கப்பலின் பக்கவாட்டில் மோதும் காட்சிகளை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ரஷியாவின் எதிர் நடவடிக்கைகளையும் மீறி கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறிய ஜெலென்ஸ்கி, இதை "உக்ரைனின் முன்மாதிரியான நடவடிக்கை" எனப் பாராட்டியுள்ளார்.
ப்ராஜெக்ட் 20380 வகையைச் சேர்ந்ததும், 344 அடி நீளம் கொண்டதுமான மெர்குரி, 2023-ல் சேவையில் இணைக்கப்பட்ட ரஷ்யாவின் மிகப் புதிய போர்க்கப்பல்களில் ஒன்றாகும். இதிலிருந்த 'கேஏ-27' போர் ஹெலிகாப்டரும் கப்பலுடன் சேர்த்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பிளானெட் வணிகச் செயற்கைக்கோள் படங்களில் கப்பல் தீ பற்றி எரிவதும், பின்னர் பெரும்பகுதி மூழ்கி அதன் முன்பகுதி மட்டுமே நீருக்கு மேல் தெரிவதும் பதிவாகியுள்ளது.
நவீனக் கப்பலையும் ஹெலிகாப்டரையும் இழந்தது அப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் கடற்படை மற்றும் வான்வழித் திறன்களுக்கு இரட்டை அடியாக அமைந்துள்ளது. கருங்கடல் மற்றும் பால்டிக் கடல் எல்லைகளைத் தாண்டி வட ஆப்பிரிக்கத் துறைமுகங்களிலும் உக்ரைன் ட்ரோன்களால் தாக்க முடியும் என்பது தொலைதூரக் கடற்படைத் தளங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு போர்க்களத்திற்கு வெகு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கியது உக்ரைனுக்குக் கிடைத்த முக்கிய உத்தி மற்றும் பிரசார வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.